தினகரன் 09.08.2010
நடைபாதை பூங்கா திறப்பு விழா
கோபி, ஆக. 9: கோபி சாந்தி தியேட்டர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மேல்நிலைத் தொட்டி உள்ளது. அங்குள்ள காலியிடத்தில் நடைபாதை பூங்கா அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மூன்று ஆண்டுக்கு முன்பு கோபி உதவி கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை மேற்கொண்டார்.
ரூ.2.6 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக கொண்டு மொத்தம் ரூ.5 லட்சத்தில் நமக்கு நாமே திட்டத்தில் இந்தப் பணி ‘துளிர்’ சேவை இயக்கம் சார்பில் துவக்கப்பட்டது.தற்போது, பணி முடிந்து நடைபாதை பூங்கா திறப்பு விழா நடந்தது. துளிர் இயக்கத் தலைவர் பழனி சாமி தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ரேவதி தேவி திறந்து வைத் தார். தற்போது கோவை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் அன்சுல்மிஸ்ரா மரம் நட்டு பேசி னார்.
அவர் பேசுகையில், ‘இன்றைய சூழ்நிலையில அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக சுற்றுச்சூழல் பெருமளவு மாசுபடுகிறது. இதற்காக நகராட்சியில் ஒதுக்கப்படும் ரிசர்வ் சைட்டில் 10 சதவீதம் பூங்காவுக்கென ஒதுக்க வேண்டும். உலகத் தமிழ் மாநாட்டின்போது கோவை மாநகரில் 18 ஏக்கரில் ரூ.8 கோடி மதிப்பில் 40 புதிய பூங்கா உருவாக்கப்பட்டது. இதுபோன்ற பூங்காக்களை முறையாக பராமரிக்க சிறிது கட்டணம் வசூலித்தும் பராமரிக்கலாம்’ என்றார்.துளிர் இயக்க செயலாளர் தாமஸ் வி.ஜான், தாசில்தார் சந்திரசேகர், கோபி அரசு தலைமை மருத்துவர் தன பால், துளிர் இயக்க துணை செயலாளர் நல்லசாமி, துணைத் தலைவர் வெங்கடேஸ்வரன், பொருளாளர் ராமநாதன், ஐயாமுத்து, மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.