தினகரன் 11.08.2010
தி.நகரில் அடுக்குமாடி கார் பார்க்கிங் மாநகராட்சி திட்டத்துக்கு ஐகோர்ட் தடை
சென்னை, ஆக.11: தி.நகரை சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், “தி.நகர் வெங்கட்நாராயணன் சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடல் உள்ளது. இந்த மைதானத்தை இடித்து விட்டு கார் பார்க்கிங் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் நேற்று விசாரித்தனர். மாநகராட்சி சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி, “தமிழகம் முழுவதும் இருந்து பொருட்கள் வாங்க, தி.நகருக்கு பொதுமக்கள் வருகிறார்கள். போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு கூடுதல் பார்க்கிங் அமைப்பது அவசியமாகிறது. எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது. க்ஷீ 18 கோடி செலவில் தரை தளத்தில் இருந்து 3 அடுக்கு கார் பார்க்கிங் கட்டப்பட்டு, மேல்தளத்தில் விளையாட்டு திடல் அமைக்கப்படும். இந்த கார் பார்க்கிங் திட்டம் அமலுக்கு வந்தால் 276 கார்களும், 1,200 இருசக்கர வாகனங்களும் நிறுத்தலாம். மைதானத்தை பயன்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பு வராது” என்றார்.
மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, “தி.நகரில் விதிமுறை மீறி பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது கார் பார்க்கிங் கட்டினால், அவர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே, இதற்கு அனுமதி அளிக்க கூடாது” என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “தி.நகரில் போதிய அளவு கார் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தால், விளையாட்டு திடலில் கார் பார்க்கிங் அமைக்கவிருப்பதாக மாநகராட்சி கூறுவதை ஏற்க முடியாது. பல ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வரும் மைதானத்தில் கார் பார்க்கிங் கட்ட அனுமதிக்க முடியாது. அதற்கு தடை விதிக்கிறோம். கார் பார்க்கிங் கட்டினால், அங்குள்ள வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று மனுதாரர் கூறுவதை ஏற்கிறோம். எனவே, அங்கு கார் பார்க்கிங் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்” என்று தீர்ப்பு கூறினர்.
கட்டுமான பணி நடந்தால் உடனே நிறுத்த வேண்டும் விளையாட்டு திடலில் கட்டக்கூடாது
தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: விதிமுறைகளை மீறி தி.நகரில் வர்த்தக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளனர். அந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக கார் பார்க்கிங் கட்டித்தரப்படும் என மாநகராட்சி அறிவித்தது நியாயமற்றது, சட்ட விரோதமானது. தி.நகர் ஆரம்பத்தில் குடியிருப்பு பகுதியாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக அடுக்குமாடி வர்த்தக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
வெங்கட் நாராயணா சாலையில் உள்ள கூடைப்பந்து விளையாட்டு மைதானம் பல வீரர்களை உருவாக்கியுள்ளது. டெல்லியில் உள்ள பாலிகா பஜாரை இங்கு ஒப்பிட்டு மாநகராட்சி கூறுவது நியாயமற்றது. விளையாட்டு மைதானத்தில் கட்டுமான பணிகள் நடந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த மைதானத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.