தினமலர் 11.08.2010
டவுன் பஞ்.,களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தென்காசி : டவுன் பஞ்.,களில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை முதல்வருக்கு தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில துணை செயலாளர் முனிசாமி, மாவட்ட செயலாளர் சம்சுகனி, மாவட்ட தலைவர் ஜஸ்டின், பொறியாளர் சங்க மாநில துணை செயலாளர் கோபி, ராமர் மற்றும் நிர்வாகிகள் துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:அரசாணை எண் 150ஐ காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். டவுன் பஞ்.,களில் பணிபுரியும் தலைமை எழுத்தர், இளநிலை உதவியாளர், வரிவசூலர் பணியிடங்களுக்கு மாநில அளவிலான பணி மூப்புரிமை பட்டியலை வெளியிட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஒவ்வொரு டவுன் பஞ்.,சிற்கும் ஒரு கம்ப்யூட்டர் இயக்குபவருக்கான பணியிடம் தோற்றுவிக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். மண்டல உதவி இயக்குநர் பணியிடங்களை மூத்த தகுதியான செயல் அலுவலர்களை கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு பேரூராட்சி பொறியாளர் சங்கம் சார்பில் துணை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:டவுன் பஞ்.,களில் நிரந்தர பணி ஆய்வாளர்களாக பணியாற்ற வருகிறோம். எங்களை நாளது தேதி வரை பணி வரன்முறை செய்ய வில்லை. உரிய பணி உயர்வு பெற பொறியியல் பிரிவு பணியமைப்பு விதிகள் ஏற்படுத்தப்பட வில்லை. தற்போது நகராட்சி துறையிலிருந்து வரைவாளர் பணியிடங்களை மாற்று பணி அடிப்படையில் நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளது. எங்களிடம் கல்வி தகுதி உள்ள நிலையில் மாற்று பணியை ரத்து செய்து பணியமைப்பு விதியை ஏற்படுத்தி எங்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.