தினமணி 13.08.2010
வாரச் சந்தை ஏல பிரச்னை: நகராட்சிக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
சிவகங்கை,ஆக.12: வாரச் சந்தையை ஏலம் விட ஆணையர் எதிர்ப்புத் தெரிவித்ததால் சிவகங்கை நகராட்சிக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.
சிவகங்கை நகர்மன்ற அவசரக் கூட்டம் வியாழக்கிழமை துவங்கியவுடன் நகர்மன்ற கவுன்சிலர்கள் வாரச் சந்தையை ஏலம் விடுமாறு ஆணையர் சுந்தரமூர்த்தியிடம் வலியுறுத்தினர். அதற்கு அவர் சந்தையை ஏலம் விட்டால் வருமான இழப்பு ஏற்படும் என்றார்.
சென்ற முறை ஏலம் விட்ட தொகையை விட 5 சதவீதம் கூடுதல் தொகை நிர்ணயிக்க வேண்டும் என விதிமுறை இருப்பதாக அவர் கூறினார்.
இதற்கு நகர்மன்றத் தலைவர் நாகராஜன் மற்றும் சில கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நகர்மன்ற கூட்ட அறைக்கதவைப் பூட்டினர். இதனால் பரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து போலீஸôர் அங்கு குவிக்கப்பட்டனர். உள்ளே ஆணையரிடம் நகராட்சிப் பணிகள் குறித்து அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினர்.
நகராட்சியில் சரியாக சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் நடக்கவில்லை.
குடிபோதையில் பணிக்கு வருகின்றனர். நகராட்சியில் புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் ஆய்வாளர் இல்லை. வரிவசூல் மட்டும் செய்கின்றனர்.
வேறுவேலை எதுவும் நடக்கவில்லை என அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இடையில் சில கவுன்சிலர்கள் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். நகராட்சி பிரச்னைகள் தொடர்பாக இருவாரங்களில் நடவடிக்கை எடுக்கிறேன் என ஆணையர் கூறியதைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது. சுமார் 15 நிமிடம் இந்த பரபரப்பு நீடித்தது.