தினமணி 11.08.2009
குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு– ஆட்சியர்
திண்டுக்கல், ஆக. 10: திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மா. வள்ளலார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டதன் காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க, மாவட்ட ஆட்சியர் மூலம் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெற அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் இ. பெரியசாமி, மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னைக்காக அரசு நிதி ஒதுக்க பரிந்துரை செய்தார். தற்போது, ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாற்று புதிய நீராதாரத்துக்கு போர்வெல் அமைத்தல், புதிய மோட்டாரைப் பொருத்துதல், புதிய குழாய் மூலம் விஸ்தரித்தல் போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.