தினகரன் 13.08.2010
சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவேண்டும் போஸ்டர் ஒட்டுவோர் மீது நடவடிக்கைக்கு உத்தரவு அமைச்சர் ஏ.கே.வாலியா அறிக்கை
புதுடெல்லி, ஆக. 13: டெல்லி நகரை சர்வதேச தரத்துக்கு அழகாக வைத்து கொள்ள நகரை அசிங்கப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி, போலீசாருக்கு மாநில நிதித்துறை அமைச்சர் ஏ.கே.வாலியா கேட்டுக் கொண்டுள்ளார். காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு நகரை அழகுபடுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, நகரை அசிங்கப்படுத்தும் பணியில் தொடர்ந்து சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசு கேட்டு கொண்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெல்லியை சர்வதேச நகரமாக ஆக்கும் முயற்சியில், நகரை அசிங்கப்படுத்துவோர் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதற்காக டெல்லி அழகை பாழ்படுத்துவோர் தடுப்பு சட்டத்தை மாநகராட்சியும், போலீசாரும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். நகரில் போஸ்டர்கள், பேனர்கள், சுவர்களில் விளம்பரம் வரைதல் ஆகியவற்றை தடுக்க வேண்டும். பொதுமக்களும் இப்பிரச்னையில் அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு நகரை சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.