தினகரன் 13.08.2010
சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க சிறப்பு தனிப்படைகள்
புதுடெல்லி, ஆக. 13: சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க 7 மண்டலங்களில் சிறப்புப் படையினரை நிறுத்த மாநகராட்சி முடிவு செய் துள்ளது.
டெல்லியில் அனுமதியில்லாமல் 2361 பால் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இதனால், பல பகுதிகளில் கால்நடைகள் கேட்பாரின்றி அலைந்து திரிகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் சாலையில் திரிந்த 13,898 கால்நடைகளை மாநகராட்சி பிடித்தது. இந்த ஆண்டு பிடிபட்ட மாடுகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
இதனால் இந்த பால் பண்ணைகள் அனைத்தையும் புறநகர் கோகாவுக்கு மாற்றநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கோகா பால்பண்ணையில் 2080 தனித்தனி மனைகளை மாநகராட்சி உருவாக்கியது. ஆனால், இதுவரையில் நகரில் அனுமதிபெறாமல் பால்பண்ணை வைத்துள்ள ஒருவர் கூட, கோகாவுக்கு தங்கள் பண்ணையை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை. இதனால், ஆடு, மாடுகள் சாலையில் சுற்றித்திரிவது தொடர்கதையாக உள்ளது.
அக்டோபரில் காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக டெல்லியின் சாலையிலிருந்து ஆடு, மாடுகளை அகற்றி விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதுபற்றி ஆலோசிப்பதற்காக மாநகராட்சி நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப்பதற்காக 7 மண்டலங்களில் சிறப்புப் படையை சாலைகளில் நிறுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மத்திய டெல்லி, தெற்கு டெல்லி, டெல்லி, சதர் பகர்கஞ்ச், கரோல் பாக், சிவில் லைன்ஸ், ஷாதரா(தெற்கு) ஆகிய மண்டலங்களில் செப்டம்பர் 1ம்தேதி முதல் இந்த சிறப்புப் படையினர், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப் பார்கள் என்று மாநகராட்சி அதி காரிகள் கூறினர்.
பால்பண்ணைகள் கோகா பால்பண்ணை வளாகத்துக்கு மாற்றப்படவில் லையே? என்று கேட்டதற்கு, மாநகராட்சி கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா கூறுகையில், ‘நகர்ப்புறங்களில் விலங்கை வீட்டில் வைத்துக்கொள்ள தடை விதித்தால் சாலையில் திரியும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்’ என்றார்.