தினமலர் 17.08.2010
நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்:தகவல்
புதுடில்லி: வரும் 2050ம் ஆண்டில் நம் நாட்டின் ஜனத்தொகையில் 45 சதவீதம் பேர், நகரங்களில் தான் வசிப்பரென, தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது நாட்டின் ஜனத்தொகையில் 30 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கின்றனர். மீதமுள்ள 70 சதவீத மக்கள் 6 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் வசிக்கின்றனர். அடுத்த 40 ஆண்டுகளில் 38 கோடி மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயரக்கூடும். விளைநிலங்கள் அழிக்கப்பட்டு புறநகர் பகுதியாக மாறி வருகின்றன. இதனால், கிராமங்களின் பரப்பளவு சுருங்கி வருகிறது. தற்போது நம் நாட்டின் ஜனத்தொகையில் 10 சதவீதம் பேர் 20 பெரிய நகரங்களில் வசிக்கின்றனர். கடந்த 1901ம் ஆண்டுகளில் ஒரு நகரத்தில் ஒரு லட்சம் பேர் வரை வசித்தனர். 51ம் ஆண்டில் 45 லட்சம் பேர் வரை நகரங்களில் வசித்தனர். 2001ல் இந்த எண்ணிக்கை 69 லட்சமாக உயர்ந்தது. வேலை வாய்ப்பு மற்றும் அதிக வருவாயின் காரணமாக கிராமங்களிலிருந்து நகரங்களில் குடிபெயர்வோரின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கணிசமாக அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 50ம் ஆண்டில் நாட்டின் ஜனத்தொகையில் 45 சதவீதம் பேர் நகரங்களில் தான் வசிப்பர். பணக்காரர்கள் அதிகம்: கடந்த மார்ச் நிலவரப்படி, நம் நாட்டின் ஏழை குடும்பங்களின் எண்ணிக்கை 4.1 கோடி. ஆண்டு வருமானம் 40 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் இந்த கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் நம் நாட்டில் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 67 லட்சம். ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள் இந்த கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஓராண்டில் 45 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வரை வருவாய் ஈட்டுவோர் நடுத்தர குடும்பத்தினராக கருதப்படுகின்றனர். இந்த வகையில் 14 கோடியே 70 ஆயிரம் பேர் இந்த கணக்கில் வருகின்றனர். இவ்வாறு தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.