தினமலர் 17.08.2010
மாநகராட்சி பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு ஏற்பாடு
சென்னை : “”சென்னை மாநகராட்சியின் மேலும் 15 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்படும்,” என, மேயர் சுப்ரமணியன் பேசினார்.சென்னை மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கில் நேற்று நடந்தது.கூட்டத்தில் மேயர் சுப்ரமணியன் பேசியதாவது:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வியே அடிப்படை.மாநகராட்சி சார்பில், இம்மாத இறுதிக்குள் 10 ஆற்றல்சார் பள்ளிகள் துவங்கப்படும். கடந்த ஆண்டு துவங்கப்பட்ட 25 ஆங்கில பள்ளிகளில் 750 மாணவர்கள் சேர்ந்தனர்.இந்தாண்டு இப்பள்ளிகளில் 1,385 பேர் சேர்ந்துள்ளனர். வரும் அக்டோபரில் விஜயதசமி அன்று மேலும் 15 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்படும்.ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் பத்து மாணவர்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தால், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டிவரும். அந்நிலை வராமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார்.