தினகரன் 17.08.2010
மணலி பகுதியில் பழுதான குடிநீர் குழாய் மாற்றும் பணி தொடக்கம்
திருவொற்றியூர், ஆக. 17: மணலி நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மாதவரம் நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய் மூலம் மணலி விமலாபுரம் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், மாதவரம் நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் கசிந்து வீணாகிறது. இதனால் சீரான குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து மணலி பாடசாலை தெரு பகுதியில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த பழுதான குழாயை அப்புறப்படுத்தி விட்டு, புதிய குழாய் புதைக்க நகராட்சி நிர்வாகம் க்ஷீ 10 லட்சம் ஒதுக்கியது.
இதற்கான பணி சில தினங்களுக்கு முன் தொடங்கியது. நகராட்சி தலைவர் முல்லை ஞானசேகர் தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் பாஸ்கர், துணைத்தலைவர் வளர்மதி பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சி தலைவர் ஞானசேகரன் கூறுகையில், “முதல் கட்டமாக பாடசாலை தெருவில் உடைந்த குழாயை அகற்றிவிட்டு க்ஷீ 10 லட்சம் செலவில் புதிதாக குழாய் பொருத்தப்படுகிறது. இதேபோல் மற்ற பகுதிகளில் உள்ள குழாய்களும் படிப்படியாக மாற்றப்படும். அதன்பின்னர், மணலி மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கும்” என்றார்.