தினகரன் 17.08.2010
போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் கால்நடைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை
புதுடெல்லி, ஆக. 17: காமன்வெல்த் விளையாட்டு போட்டியின்போது போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க பசுக்கள் உட்பட கால்நடைகளை நகரில் இருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் கே.எஸ்.மெஹ்ரா தெரிவித்தார்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அக்டோபர் 3 முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. அப்போது சுமூகமான போக்குவரத்துக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நகரின் முக்கியச் சாலைகளில் கால்நடைகள் அனாதையாக சுற்றித் திரிகின்றன. சில சமயங்களில் சாலையின் மத்தியில் அந்த கால்நடைகள் படுத்து விடுகின்றன.இதனால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சிலர் வீட்டிலேயே பசு மற்றும் எருமைகளை வளர்க்கின்றனர். அவற்றை வீட்டில் வைத்துக்கொள்ள முறைப்படி மாநகராட்சியின் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அப்படி அனுமதி இருந்தாலும் அவற்றை வெளியில் சுற்றவிடக்கூடாது. ஆனால், அனுமதி பெற்றுள்ள பலரும் தங்களின் பசு மற்றும் எருமைகளை தெருக்களில் விடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதனால் பசுக்கள் மற்றும் எருமைகளை நகரில் இருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் பல இடங்களில் கால்நடை கூடங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த கால்நடை பாதுகாப்புக் கூடங்களில் பசு மற்றும் எருமைகளை கொண்டு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடங்களில் இருக்கும் பசுக்களையும் எருமைகளையும் கண்காணிக்க 13 டாக்டர்களும் நியமிக்கப்படுவார்கள். இதற்காக 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். இவ்வாறு ஆணையாளர் கூறினார்.