தினமலர் 18.08.2010
சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை
பந்தலூர்:பந்தலூர் பஜார் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை நகராட்சி மூலம் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பந்தலூர் பகுதி சாலை மிகவும் குறுகலான சாலையாக உள்ளதாலும், சாலையோரங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தி வைத்து கொள்வதாலும் பாதசாரிகள் சாலையோரம் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இந்நிலையில் இப்பகுதி கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை பஜார் பகுதியில் விடுவதால் போக்குவரத்திற்கும், மக்கள் நடந்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் வந்து செல்லும் நிலையில், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை நகராட்சி மூலம் பிடித்து அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணி விரைவில் துவக்கப்படும் என்று செயல் அலுவலர் வேணுகோபால் தெரிவித்தார்.