தினமலர் 21.08.2010
ரூ.23.9 கோடியில் வீராங்கல் ஓடை விரிவாக்க பணி துவக்கம்
வேளச்சேரி : ஆலந்தூர் நகராட்சி எல்லையில் இருந்து வேளச்சேரி கைவேலி வரை வீராங்கல் ஓடையின் விரிவாக்கப் பணிக்காக வேளச்சேரி – மவுன்ட் உள்வட்டச் சாலையின் இருபுறமும் 23.9 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.
மழைக் காலத்தில் உள்ளகரம் – புழுதிவாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி ராம்நகர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும். இதனால், ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் பொருட்சேதம் ஏற்படும்.
அந்த காலகட்டத்தில் அப்பகுதி மக்கள் படகு சவாரி செய்து, தங்கள் வீடுகளுக்கு சென்று வருவர். அங்கு தேங்கிய மழைநீர் செல்ல வழியில்லாமல் பல மாதங்கள் தேங்கிவிடும். இதற்கு முக்கிய காரணம் வீராங்கல் ஓடை பாதியில் நின்றுவிட்டது தான்.
ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீராங்கல் ஓடை வழியாக பள்ளிக்கரணை கைவேலியில் சேர்ந்து அங்கிருந்து கடலில் சென்று கலக்கும்.கடந்த 30 ஆண்டுகளில் வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம் – புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகிவிட்டன. இதனால், வீராங்கல் ஓடை பாதியில் நின்று விட்டது. எனவே, மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புகளில் பாய்ந்து வருவதால் மழைக் காலத்தில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, வீராங்கல் ஓடையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என “தினமலர்‘ நாளிதழ் அவ்வப்போது படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டு வந்தது. அதன் பலனாக தற்போது வீராங்கல் ஓடைக்கு விமோசனம் பிறந்துள்ளது.ஆலந்தூர் நகராட்சி எல்லையில் முடிவடையும் வீராங்கல் ஓடையை விரிவாக்கம் செய்ய, பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பு திட்டமிட்டது. பின், நெடுஞ்சாலை துறையிடம் தேவையான நிலம் பெற்று வேளச்சேரி – மவுன்ட் உள்வட்டச் சாலை இருபுறத்திலும் கான்கிரீட் கால்வாய் அமைக்க முடிவு செய்தது. அதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆலந்தூர் நகராட்சி எல்லையில் முடிவடைந்துள்ள வீராங்கல் ஓடையை விரிவாக்கம் செய்யும் வகையில் 23.9 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் கால்வாய் கட்டப்படுகிறது. இதற்காக, நெடுஞ்சாலைத் துறையிடம் நிலம் பெறப்பட்டுள்ளது. இந்த கான்கிரீட் கால்வாய் வேளச்சேரி – மவுன்ட் உள்வட்டச் சாலையின் இருபுறமும் 2.5 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. கால்வாயின் அகலம் ஆறு மீட்டர்.கால்வாயின் இருபக்கமும் முக்கால் மீட்டர் அகலத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்படுகிறது. வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்து கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அடுத்த 18 மாதத்தில் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே அடுத்த மழைக் காலத்திற்கு கால்வாய் கட்டி முடிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.