தினமலர் 24.08.2010
விருகம்பாக்கம் கால்வாய்: மேயர் ஆய்வு
சென்னை:விருகம்பாக்கம் கால்வாய் சீரமைக்கும் பணியை மேயர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.ஜவகர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் நீர்வழித் தடங்கள் தூர் எடுத்து கரைகளை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதுபோல், விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாய் 6.34 கி.மீ., நீளத்திற்கு 83 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி நடக்கிறது.இந்த பணியை மேயர் நேற்று காலை ஆய்வு செய்த போது கூறியதாவது:மழைக் காலத்தில் நகரில் வெள்ளப் பெருக்கை தவிர்க்க ஜவகர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 1,447 கோடி ரூபாய் மதிப்பில் 12 நீர்பிடிப்பு பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாயில் வெள்ளப் பெருக்கை தவிர்க்க 2.34 கி.மீ., நீளத்திற்கு 25 கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்பில் கூவம் ஆற்றிற்கு இணை கால்வாய் அமைக்கப்படுகிறது.விருகம்பாக்கம் கால்வாயில் 6.34 கி.மீ., நீளத்திற்கு கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்படும்.மதுரவாயல் ஏரியில் உபரி நீரை கூவம் ஆற்றிற்கு திருப்பி விடும் வகையில், 17 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பில் கால்வாய் சீரமைக்கப்படும்.இந்த பணிகள் முடிந்தால் அரும்பாக்கம், ஜெய் நகர், எம்.எம்.டி.ஏ., காலனி, சாய் நகர், சின்மயா நகர், அய்யப்பா நகர், சேமத்தம்மன் நகர், ஆசாத் நகர், திருவள்ளுவர்புரம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேக்கம் இல்லாத நிலை ஏற்படும்.இவ்வாறு மேயர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.