தினமணி 12.08.2009
வண்ணாமலை, ஆக. 11: திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரத்தை பெருக்க அரசு ரூ.2.70 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகளை 15 நாளில் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குடிநீர் பற்றாக்குறை குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் மு. ராஜேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
அரசு ஒதுக்கீடு செய்த பணத்தில் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும், பேரூராட்சிக்கு தலா ரூ.5 லட்சமும், ஊராட்சி ஒன்றியத்துக்கு ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திறந்தவெளி கிணறை ஆழப்படுத்துதல், புதிய கிணறு தோண்டுதல், புதிய போர்வேல் மற்றும் கைப்பம்பு அமைத்தல் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பி.ஆர்.கே. ரமேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆர். மனோகரன், செயற்பொறியாளர் (விசைப்பம்பு) உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.