தினகரன் 25.08.2010
ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையை தரம் உயர்த்த பேரூராட்சி கூட்டத்தில் முடிவு
குன்னூர், ஆக.25: ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உலிக்கல் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் சுரேஷ் தலைமை யில் நடந்தது. செயல் அலுவலர் ஆல்துரை முன்னிலை வகித்தார். துணை தலைவர் ராதா வரவேற்றார். பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் பழுதடைந்த நிலையிலுள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும். பன்னவேணு பகுதியில் குடிநீர் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதை மாற்றி புதிய மோட்டார் வாங்க வேண்டும். பில்லி மலை பகுதியிலுள்ள குடிநீர் தேக்க தொட்டியில் குப்பைகள் அதிகளவு காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். எனவே இதனை தவிர்க்க வடிகால் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.
உலிக்கல் பகுதியில் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகைக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும். யானைபள்ளம் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ் செல்வன், கந்தசாமி, செங்குட்டுவன், ஜோசப், ராதா உட் பட பலர் பங்கேற்றனர்.