தினகரன் 26.08.2010
மாநகராட்சி ஏற்பாடு மழைநீர் அகற்றுவதற்கு 100 மோட்டார் பம்புகள்
சென்னை, ஆக.26: சென்னையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வழித்தடங்களில் மழைநீர் தேக்கத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தேனாம்பேட்டையில் உள்ள மாம்பலம் கால்வாயில் நடைபெறும் இந்த பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தாழ்வான பகுதிகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றிட 100 மோட்டார் பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஓட்டேரி நல்லா, கேப்டன் கால்வாய் உள்ளிட்ட 22 நீர்வழித் தடங்களை ஆழப்படுத்தியும், தூர்வாரியும் சீரமைக்கப்படுகிறது. இந்த பணி ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், ரூ1,448 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 400 கி.மீ நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.