தினமணி 26.08.2010
மழை நீரை அகற்ற 100 மோட்டார் பம்புகள்
சென்னை, ஆக. 25: சென்னையில் மழை நீர் அகற்றுவதற்கு 100 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை தேனாம்பேட்டை மாம்பலம் கால்வாயில் மழை நீர் அகற்றும் பணியினை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ், சென்னையில் உள்ள பக்கிங்ஹாம், மாம்பலம், ஓட்டேரி நல்லா, கேப்டன் கால்வாய் என 22 நீர் நிலைகளில் மழைநீர் அகற்றும் பணிகளுக்காக தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இத்திட்டப் பணிகள் ரூ.1,448 கோடி செலவில் பொதுப் பணித்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 400 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய மழை நீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளிலும், சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் அகற்றுவதற்காக அதிக திறன் கொண்ட 100 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வியாசர்பாடி கணேசபுரம் போன்ற மழை நீர் தேங்கிய இடங்களில் மழை நீர் அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது என்றார்.