தினகரன் 27.08.2010
தேவையில்லாமல் வழக்கு தொடருவதா? குடிநீர் வாரியத்துக்கு ரூ50,000 அபராதம்
புதுடெல்லி, ஆக. 27: வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார் என்ற காரணத்துக்காக தேவையில்லாமல் கீழ் நீதிமன்ற நீதிபதி குற்றம்சாட்டி மேல்முறையீடு செய்வதா என்று குடிநீர் வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் கடும் தெரிவித்துள்ளது.
குடிநீர் வாரியம் நஷ்டஈடு தரக்கேட்டு கீழ் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, வாரியத்தின் சார்பில் மனு செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை கீழ் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாரியம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி வி.கே.ஜெயின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதை தொடர்ந்து நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:
குடிநீர் வாரியத்தின் மேல் முறையீட்டில் போலியானதாகவும், தவறானதாகவும், மேல்முறையீடுக்கே தகுதியற்றதாகவும் உள்ளது. தனக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அது தொடர்பாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்ற தவறான எண்ணம் அரசு அதிகாரிகளிடம் உள்ளது. அரசு தொடர்பான வழக்குகள் அதிகரிக்க இதுவே காரணம். ஒவ்வொரு துறையிலும் சட்ட ஆலோசனை அதிகாரிகள் இல்லாததால் ஒரு வழக்கு மேல்முறையீடுக்கு தகுதியானதா என்பதை ஆராயாமலேயே மேல்முறையீடு செய்யப்படுகிறது. தகுதியற்ற இந்த வழக்கை தாக்கல் செய்ததற்காக குடிநீர் வாரியத்துக்கு ரூ50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தவறுக்கு காரணமாக அதிகாரிகளிடம் இருந்து நீதிமன்றம் விதித்துள்ள அபராதத்தை வசூலிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.