தினகரன் 27.08.2010
விதியை மீறி ஒப்பந்த பணி செய்த தர்மபுரி நகராட்சி கவுன்சிலர் டிஸ்மிஸ்
தர்மபுரி, ஆக.27:தர்மபுரி நகராட்சி 22 வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் தங்கமணி (45). இவர் தனது பெயரில் நகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக மற்ற கவுன்சிலர்கள், ஆணையாளர் அண்ணாதுரையிடம் புகார் கொடுத்தனர்.
‘நகராட்சி பதவியில் இருப்பவர்கள், நகராட்சி சார்ந்த பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்யக்கூடாது என்ற விதிமுறையை மீறி செயல்பட்ட தங்கமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய ஆணையாளர் அண்ணா துரை, கவுன்சிலர் தங்கமணி யை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆணை யாளர் அண்ணாதுரை கூறும்போது, “22வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தங்கமணி, மெசர்ஸ் தங்கமணி ஏஜென்சி என்ற நிறுவனத்தின் பெயரில் நகராட்சி பணியை எடுத்து செய்து முடித்துள்ளார். அதற்கான காசோலையை கையொப்பமிட்டு வாங்கியுள்ளார். நகராட்சி விதிகளின்படி நகர்மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தங்கமணியை நீக்கியுள்ளோம்.’ என்றார்.
ஏற்கனவே நகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்த நகர் மன்ற துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.