தினமலர் 03.09.2010
பூங்காக்குழு தலைவரை புறக்கணித்துதிறக்கப்படும் மாநகராட்சி பூங்காக்கள்
கோவை:கோவை மாநகராட்சியில் புதியதாக அமைக்க திட்டமிட்ட 40 பூங்காக்களில் 25ல் பணி நிறைவடைந்துவிட்டது. அதன் திறப்பு விழாக்கள் ஒவ்வொன்றாக நடந்து வருகின்றன. இதில் கல்வி மற்றும் பூங்காக்குழு தலைவரை புறக்கணித்து விட்டு, விழா நடத்தப்படுகிறது. கோவை மாநகராட்சி கல்வி மற்றும் பூங்காக்குழு தலைவராக இருந்த கல்யாணசுந்தரம், கடந்த வாரம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சி விதிமுறைகளின்படி பத்திரிக்கைகளுக்கு செய்திகளை கொடுப்பேன் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநகராட்சி கமிஷனர், “உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்யாணசுந்தரத்துக்கு, கமிஷனர் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், “மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்ட உங்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஏன் அரசுக்கு பரிந்துரை செய்யக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பி, நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பதிலளிக்க 15 நாட்கள் கால அவகாசம் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களை திறப்பதாக மாநகராட்சி அறிவித்தது. அதற்கான அறிவிப்பை தயார் செய்து அமைச்சரிடமும் திறப்பு விழா தேதிகளை மாநகராட்சி நிர்வாகம் வாங்கியது.
அதன் அடிப்படையில் கல்வி மற்றும் பூங்காக்குழு உறுப்பினர்கள்,வார்டு கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள் என்று அனைவருக்கும் பூங்கா திறப்பு குறித்து முறையான அழைப்பு தகவலை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியது. ஆனால், பூங்கா அமைப்பதற்கு காரணமான கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரத்திற்கு மாநகராட்சி சார்பில் எந்த அழைப்பும் அனுப்பி வைக்கப்படவில்லை. தகவல்களை தொலைபேசியில் கூட சொல்லவில்லை.மொத்தமுள்ள 40 பூங்காக்களில் 25 பூங்காக்களின் பணிகள் நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள 15 பூங்காக்களில் பணிகள் நடந்து வருகிறது. நிறைவடைந்த பூங்காவை அமைச்சர், மேயர், கமிஷனர். துணைமேயர், துணைகமிஷனர் என்று அனைத்து தரப்பினரும் பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்று நிறைவு செய்கின்றனர். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் கூறியதாவது: இது ஜனநாயக நாடு.
எந்த ஒரு பிரச்னைக்கும், சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தீர்வு காணமுடியும். மாநகராட்சி மன்றத்தில் நடந்த பேச்சுக்கள் அனைத்தும் பதிவுக்கு உட்பட்டவை. அதில் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் மாநகராட்சி மரபுகளையோ, விதிமுறைகளையோ மீறவில்லை. அரசுக்கோ, மாநகராட்சியின் நற்பெயருக்கோ எந்த சூழலிலும் குந்தகம் ஏற்படுத்தவில்லை. பத்திரிகைகளில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கல்விக்குழு மேற்கொண்ட பணிகளை தெரிவிப்பதில் எவ்வித தவறுமில்லை. அது என்னுடைய அடிப்படை உரிமை. அதில் தலையீடு செய்வதற்கு ஜனநாயக நாட்டில் யாருக்கும் உரிமை இல்லை. சாதாரண விஷயத்திற்காக எனக்கு நோட்டீஸ் அனுப்புவதில் எந்த அடிப்படை நியாயமுமில்லை. பூங்கா திறப்பு குறித்து எனக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்படாதது குறித்து நான் கவலைப்படவில்லை. பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட பூங்காவை மக்களுக்கு அர்பணிப்பதில் எந்த தவறும் இல்லை, என்றார்.