தினமணி 03.09.2010
1,900 தரைக் கடைகளுக்கு விரைவில் ஏலம்
மதுரை, செப்.2: மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள புதிய சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் 1,900 தரைக் கடைகளுக்கு, 15 தினங்களில் ஏலம் விடப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும் என, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின், துணைமேயர் பி.எம். மன்னன் ஆகியோர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூட்டாகக் கூறியது:
மாட்டுத்தாவணியில் புதிய சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் 13-க்கு 13 அளவிலான 284 கடைகளும், 8-க்கு 8 அளவுள்ள 240 கடைகளும் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளன.
மார்க்கெட் முழு அளவில் செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரைக்கடை வியாபாரிகளை அழைத்து, மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்.
மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முயற்சியால் மார்க்கெட்டில் வியாழக்கிழமை ஒரே நாளில் 180 கடைகளுக்கு மின் இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
தரைக்கடைகள் ஒதுக்கீடு செய்வதில் எவ்வித பாரபட்சமும் இருக்காது. முறைப்படி டெண்டர் விடுக்கப்பட்டு, உரிய வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், மார்க்கெட்டில் 2 இடங்களில் நவீன கழிப்பிட வசதி, 4 இடங்களில் ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் வசதி, 15 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டு, மாநகராட்சியால் குடிநீர் நிரப்பப்பட்டும், விளக்கு வசதி மற்றும் மழை நீர் செல்வதற்கு உரிய வடிகால் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கேண்டீன் வசதியும் இங்கு உள்ளது.
ஆக்கிரமித்தால் நடவடிக்கை:
மார்க்கெட்டில் அனுமதி பெற்ற வியாபாரிகள் மட்டுமே கடை நடத்தவேண்டும். மார்க்கெட்டுக்குள் நடைமேடை மற்றும் அனுமதி பெறாத இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைக்கக் கூடாது. அதேபோல், ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வியாபாரிகள் கடைகளை வைத்துக்கொள்ளவேண்டும். இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் வியாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். வேறு கடைகளும் மார்க்கெட்டுக்குள் வைக்கக்கூடாது.
பழைய மார்க்கெட் இடத்தில் மூன்றடுக்கு வாகன நிறுத்தம்:
மேலும், மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும். அங்கு, 3 அடுக்கு நவீன வாகன நிறுத்தம் கட்டும் பணிக்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். மார்க்கெட் மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
முன்னதாக, கடைகள் செயல்பாடு குறித்து ஆணையர் எஸ். செபாஸ்டின் ஆய்வு செய்தார்.