தினகரன் 06.09.2010
குப்பையை விரைவாக அகற்ற 23 ஹாலேஜ் டிப்பர் லாரி மாநகராட்சி வாங்குகிறது தானே மூடி திறக்கும் வசதி கொண்டது
சென்னை, செப்.6: விரைவாக குப்பையை அகற்றி எடுத்துச் செல்வதற்காக ரூ5.21 கோடி செலவில் தானாக மூடி திறக்கும் மேற்புற கதவுகளுடன் கூடிய 23 ஹாலேஜ் டிப்பர் லாரிகளை மாநகராட்சி வாங்குகிறது.
புளியந்தோப்பு, ஐஸ்அவுஸ், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 4 மண்டலங்களிலும் நீல்மெட்டல் பனால்கா என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள வார்டுகளில் சரியான முறையில் குப்பை அகற்றுவதில்லை என்று தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில், இந்த 4 மண்டலங்களிலும் மாநகராட்சியே துப்புரவுப் பணியை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளது. இந்த பகுதிகளில் குப்பையை அகற்றி குப்பை மாற்று வளாகத்திற்கு விரைவாக எடுத்துச் செல்வதற்காக தானாக மூடி திறக்கும் மேற்புற கதவுகளுடன் கூடிய ‘ஹாலேஜ் டிப்பர் லாரிகளை’ கோடம்பாக்கத்திற்கு 10, ஐஸ் அவுசுக்கு 5, புளியந்தோப்பு மற்றும் அடையாறுக்கு 8 என ரூ5.21 கோடி செலவில் 23 லாரிகளை மாநகராட்சி வாங்கவுள்ளது. இந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் 18 கன மீட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். வாகனங்களை வாங்குவதற்காக மன்ற கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.