தினகரன் 07.09.2010
ரூ20 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆடு அறுக்கும் கட்டடம் மூடிகிடக்கும் அவல நிலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நெல்லிக்குப்பம், செப் 7: நெல்லிக்குப்பம் ஆலைரோடு பகுதியில் நகராட்சி சார்பில் காய்கறி மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனை மார்க்கெட் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்த மார்க்கெட்டில் சிறிய ஒட்டு கொட்டகையில் ஆடு அறுக்கப்படுகிறது. மேலும் அறுக்கும் ஆட்டின் கழிவு நீர் கால்வாயில் சென்று கலக்க வழியில்லாமல் அங்கேயே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும், தொற்று நோய் ஏற்படும் நிலை உருவானது. மேலும் மார்க்கெட்டில் துர்நாற்றம் வீசுவதால் மார்க் கெட்டுக்கு இறைச்சி வாங்க வருபவர்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் அதிநவீன ஆடு அறுக்கும் தொட்டி அமைத்து தர வேண்டும் என நகராட்சியிடம் கோரிக்கை வைத்தனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று
ரூ20 லட்சம் மதிப்பில் அதி நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆடு அறுக்கும் தொட்டி கட்டப்பட்டது. அதற்கான பணிகள் முமுமையடைந்து இரண்டாண்டு ஆகியும் இதுவரை பொதுமக்களின் பயன் பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நெல்லிக்குப்பம் பகுதியில் சரவணபுரம், அண்ணாநகர், சோழவள்ளி, மோரை எவரெட்புரம் உட்பட பல்வேறு இடங்களில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ58 லட்சம் மதிப்பிலான சுகாதார துப்புரவு வளாகங்கள் அமைக்கப்பட்டது. இதில் சில வளாகங்கள் மட்டுமே திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட வளாகங்களும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொது மக்களின் நிரந்தர பயன் பாட்டிற்கு கொண்டு வர முடியாமல் பாழாகும் நிலை உள்ளது.
சில வளாகங்கள் 8 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் பல்வேறு திட்டங்களுக்கான மதிப் பீடுகளை தீட்டி அரசிட மிருந்து அதற்கான நிதியினை பெற்று பணிகள் நடந்தால் போதும். அந்த பணிகள் தரமானதாக உள்ளதா, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதா என கண்டு கொள்வதில்லை. இதனால் ஒப்பந்ததாரர்களும் தரமில்லாத கட்டடங்களை கட்டி ஒப்படைத்து விடுகின்றனர். அவை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் கட்டப்பட்ட கட்டடமும், அரசு பணமும் பாழாய் போகும் நிலை நிலவுகிறது. எனவே நெல்லிக்குப்பம் மார்க்கெட்டில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆடு அறுக்கும் அதிநவீன கூடம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு உடனடி யாக கொண்டுவர நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் ரூ20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அதி நவீன ஆடு அறுக்கும் கூடம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் மூடிக்கிடக்கிறது. இதை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.