தினமலர் 07.09.2010
மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையில்சேலத்தில் 14 வார்டுகள் இரண்டாக பிரிப்பு
சேலம்: சேலம் மாநகராட்சியில் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் வார்டுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 14 வார்டுகள் இரண்டாக பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சேலம் மாநகராட்சி 91.34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. மாநகராட்சி நிர்வாக நலன் கருதி வார்டுகளின் எண்ணிக்கை 72 அல்லது 75 ஆக உயர்த்தப்படும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரம் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், “அடுத்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்‘ என்று தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சியில் மக்கள் தொகை மற்றும் பரப்பளவுகளின் அடிப்படையில், ஏற்கனவே உள்ள 60 வார்டுகளில் குறிப்பிட்ட சில வார்டுகள் மட்டும் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது.நடப்பு 2010ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட 1வது வார்டில் அதிகபட்சம் 17 ஆயிரத்து 536 பேர் வசிப்பர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மாநகராட்சி 2வது வார்டில் 20 ஆயிரத்து 788 பேர், மூன்றாவது வார்டில் 20 ஆயிரத்து 839 பேர், 24வது வார்டில் 18 ஆயிரத்து 282 பேர், 27வது வார்டில் 14 ஆயிரத்து 891 பேர் வசிப்பர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட 5வது வார்டில் 21 ஆயிரத்து 612 பேர், 8வது வார்டில் 19 ஆயிரத்து 173 பேர், 12வது வார்டில் 17 ஆயிரத்து 53 பேர், 6வது வார்டில் 15 ஆயிரத்து 194 பேரும் வசிப்பர் என்று கணக்கிடப்பட்பட்டுள்ளது. அம்மாப்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட 9வது வார்டில் 22 ஆயிரத்து 156 பேர், 36வது வார்டில் 19 ஆயிரத்து 792 பேர், 37வது வார்டில் 19 ஆயிரத்து 80 பேர், 35வது வார்டில் 18 ஆயிரத்து 505 பேர் வசிப்பர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட 50வது வார்டில் 27 ஆயிரத்து 201 பேர், 58வது வார்டில் 15 ஆயிரத்து 624 பேர், 60வது வார்டில் 13 ஆயிரத்து 862 பேர், 47வது வார்டில் 13 ஆயிரத்து 20 பேர் வசிப்பர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.மாநகராட்சி 4வது வார்டு அதிகப்பட்சமாக 7.63 சதுர கி.மீ., தூரம் பரப்பளவு உடையது. 37வது வார்டு 6.13 சதுர கி.மீ., தூரம், 3வது வார்டு 5.74 சதுர கி.மீ., தூரம், 9 வது வார்டு 5.48 சதுர கி.மீ., தூரம், 5வது வார்டு 5.08 சதுர கி.மீ., தூரம், 8 வது வார்டு 4.51 சதுர கி.மீ., தூரம், 1வது வார்டு 4.12 சதுர கி.மீ.,தூரம், 6வது வார்டு 3.50 சதுர கி.மீ., தூரம், 2 வது வார்டு 3.10 சதுர கி.மீ., தூரம் பரப்பளவு உடையது.
மாநகராட்சி 24வது வார்டு 3.72 சதுர கி.மீ., தூரம், 50வது வார்டு 2.90 சதுர கி.மீ., தூரம், 22வது வார்டு 2.45 சதுர கி.மீ., தூரம், 18வது வார்டு 2.24 சதுர கி.மீ., தூரம், 59 வது வார்டு 2.06 சதுர கி.மீ., தூரம், 60வது வார்டு 2.05 சதுர கி.மீ., தூரம், 21வது வார்டு 1.79 சதுர கி.மீ., தூரம் பரப்பளவு கொண்டதாகும்.சேலம் மாநகராட்சியில், 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 24, 36, 37, 50, 59, 60 ஆகிய 14 வார்டுகள் பெரிதாக கருதப்படுகிறது. இந்த வார்டுகள் இரண்டாக பிரிக்கப்பட்டு 60ல் இருந்து 74 வார்டுகளாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குடிநீர் பிரச்னையில் தவிக்கும் சேலம் 4வது வார்டுசேலம் மாநகராட்சி நான்காவது வார்டு வெங்கடாஜலபதி தெரு, விவேகானந்தா தெரு, ஐந்து ரோடு, புவனேஸ்வரி நகர், மாருதி அவென்யூ, பார்வதி தெரு, எம்.ஜி., ரோடு, வாட்டர் போர்டு காலனி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. தி.மு.க, வை சேர்ந்த தினகரன் கவுன்சிலராக உள்ளார்.
சேலம் மாநகராட்சி வி.ஐ.பி., வார்டுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கு ஆறு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பல இடங்களில் வாரம் ஒரு முறை மட்டுமே குப்பை அள்ளப்படுகிறது. சாக்கடைகளும் முறையாக தூர்வாரப்படுவதில்லை. பல இடங்களில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
வார்டு குறித்து பாரதி நகரில் வசிக்கும் ஜோதி கூறுகையில், “”இந்த பகுதியில் பொது குடிநீர் குழாய் இல்லை. ஒருவர் மட்டும் சொந்தமாக குடிநீர் இணைப்பை பெற்றுள்ளார். அனைவரும் அங்கு தான் குடிநீர் பிடிக்கின்றனர். பலர் வெளியில் பணத்தை கொடுத்து குடிநீரை வாங்கி கொள்கின்றனர். பொது குடிநீர் குழாய் அமைத்து கொடுக்குமாறு இப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. குடிநீர் குழாய் அமைத்து கொடுக்க வார்டு கவுன்சிலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.பாரதி நகரில் வசிக்கும் இல்லத்தரசி தீபா கூறுகையில், “”பொது குடிநீர் குழாய் அமைக்கப்படாததால், பலர் அருகில் உள்ள தெருக்களுக்கு சென்று குடிநீரை பிடித்து வருகின்றனர். பல முறை மனு கொடுத்தும் ஒருவர் கூட இங்கு வந்து முறையாக ஆய்வு செய்யவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் சாக்கடை தூர்வாரப்பட்டுள்ளது. தினமும் சாக்கடைகளை தூர்வாரி, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.எம்.ஜி., ரோட்டில் வசிக்கும் சலவை தொழிலாளி குமார் கூறுகையில், “”இந்த பகுதியில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பொது குடிநீர் குழாய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். எனவே, பலர் முறையான குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எம்.ஜி.,ரோடு பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லை. எனவே, பலர் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுகின்றனர். ஏதாவது ஒரு இடத்தில் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
புவனேஸ்வரி நகரில் வசிக்கும் இல்லத்தரசி வெண்ணிலா கூறுகையில், “”இந்த பகுதியில் கொசு தொல்லையால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இங்கு சரியாக கொசு மருந்து அடிக்கப்படுவதில்லை. தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுகள் மூலம் உற்பத்தியாகும் கொசுக்களால் பொதுமக்கள் உடல் உபாதைக்குள்ளாகி வருகின்றனர். குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது கொசு மருந்து அடிக்க வேண்டும். கொசுக்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்,” என்றார்.புவனேஸ்வரி நகரில் மளிகை கடை வைத்துள்ள ராமன், வனிதா தம்பதியினர் கூறுகையில், “”இந்த பகுதியில் அனைத்து இடங்களில் தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால், ஒரு இடத்தில் கூட வேகத்தடை அமைக்கப்படவில்லை. குறுகலான வளைவு பகுதியில் வேகத்தடை இல்லாததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக இங்குள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். கொசு தொல்லையால் இரவு நேரங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
கொசுக்கடியால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கொசுவை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.நீரை உறிஞ்சும் வி.ஐ.பி.,க்கள்வார்டு கவுன்சிலர் குற்றச்சாட்டு வார்டு பிரச்னை குறித்து தி.மு.க., கவுன்சிலர் தினகரன் கூறியதாவது:நான்காவது வார்டுக்குட்பட்ட எம்.ஜி., ரோடு, வாட்டார் போர்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் வி.ஐ.பி., க்கள் வசிக்கின்றனர். பெரும்பாலோனோர் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி விடுகின்றனர். எனவே, பிற பகுதிகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. மழைகாலத்தில் நகரமலை அடிவாரத்தில் இருந்து வரும் மழை நீர் பல இடங்களில் தேங்கி விடுகிறது.தாழ்வான பகுதியாக இருப்பதாலும், சாக்கடை செல்ல வழியில்லாததாலும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. வாரம் ஒரு முறை கொசு மருந்து அடிக்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.