தினகரன் 08.09.2010
மாநகராட்சியாக உயர்கிறது நாகர்கோவில் நீண்ட நாள் கனவு நனவாகிறது
நாகர்கோவில், செப்.8: நாகர்கோவில் நகராட்சி தற்போது சிறப்பு நிலை அந்தஸ்தில் உள்ளது. 3 லட்சம் மக்கள் தொகையும் வரி வருவாய் ரூ20 கோடிக்கு மேல் இருந்தால் சிறப்பு நிலையிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
தற்போது நாகர்கோவில் நகராட்சி 24.28 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாகும். இடலாக்குடி, இளங்கடை, வல்லன்குமாரன்விளை, ராணித்தோட்டம் பணி மனை, பார்வதிபுரம், வடசேரி கலுங்கடி, ஒழுகினசேரி பாலம் ஆகியன நகராட்சி எல்கைகளாக உள்ளன. தற்போது நகராட்சிக்கு ரூ30 கோடிக்கும் மேல் வருவாய் உள்ளது. உத்தேச மக்கள் தொகை 2.35 லட்சமாக உள்ளது. 51 வார்டுகள் உள்ளன.
இந்நிலையில் நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நகராட்சியில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் இறச்சகுளம், வெள்ளமடம், தேரூர், நல்லூர், சுசீந்திரம், கீழ மணக்குடி, புத்தளம், வெள்ளிச்சந்தை, ஆளூர் வரை புதிய எல்லையாக கொண்டு புதிய எல்கைகள் நிர்ணயம் செய்து அறிக்கை தயார் செய்தனர். எனினும் அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் இன்றி இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதற்காக நேற்று முன்தினம் சேர்மன் அசோகன்சாலமன், ஆணையர் ஜானகி ஆகியோர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் நகராட்சி எல்கையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்மைகள் என்ன??
அரசு ஊழியர்கள் வீட்டு வாடகைபடி போன்றவை உயரும்.?
பாதாள சாக்கடை திட்டம், புதிய குடிநீர் திட்டங்கள் உடனடியாக நிறைவேற்ற முடியும்.?
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கிராமங்களுக்கும் தரமான சாலை வசதி, நவீன மின்விளக்கு வசதி, கழிவு நீரோடை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகியன கிடைக்கும்.?
சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரிக்கும்.?
மத்திய அரசின் நிதி அதிகளவில் கிடைக்கும். முதல் கட்ட தேவைக்களுக்கே ரூ25 கோடி வரை மத்தியஅரசின் நிதி கிடைக்கும்.?
பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை மாநகராட்சியே உருவாக்கலாம்.?
நகராட்சி தலைவர் பதவிக்கு பதில் மேயர் பதவி புதியதாக வரும். ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரியும், செயற்பொறியாளர் உள்பட ஏராளமான புதிய பணியிடங்கள் உருவாகும்.