தினமலர் 08.09.210
தொடரும் நிதியிழப்பு நவீன இறைச்சிக் கூடம் திறப்பால் குகை பகுதி உரிமைதாரர் “செக்‘
சேலம்: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட மணியனூர் பகுதியில் நவீன இறைச்சி கூடாரம் திறக்கப்பட்டுள்ளதால், குகை அறுவை மனை பகுதியில் ஆடுகளை அறுக்க உரிமம் பெற்றவர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மாநகராட்சி நிர்வாகத்திடம் தான் செலுத்திய டிபாஸிட் தொகையை திருப்பி வழங்குமாறு கேட்டுள்ளார். சேலம் மாநகராட்சி 50 வது வார்டுக்குட்பட்ட மணியனூர் பகுதியில் நவீன இறைச்சி கூடாரம் கட்ட ஆறு முறை டெண்டர் விடப்பட்டது. ஆனால், டெண்டர் எடுக்க யாரும் முன் வராத காரணத்தால் சேலம் மாநகராட்சி நிர்வாகமே 94 லட்சம் ரூபாய் செலவில் இறைச்சி கூடாரம் கட்டும் பணியை கடந்த ஆண்டு துவங்கியது. ஆடுகள் தங்குமிடம், ஆடுகள் வெட்டுமிடம்(ஆறு), ஆடுகள் ஆய்விடம், தோல் சேகரிப்பு அறை, இறைப்பை குடல் சேகரிப்பு அறை, மருத்துவர் அறை, கால் நடை மருத்துவர் அறை, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், மோட்டார் அறை, ஆடு மாமிசம் உண்ண தகுந்தவை என முத்திரையிட்டு வழங்கும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன இறைச்சி கூடாரம் கட்டி முடிக்கப்பட்டது.
நாள்தோறும் 500 ஆடுகளை வெட்டுவதற்கும், ஆடுகளை வெட்டுவதனால் வரக்கூடிய கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய இரண்டு லட்சம் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு தொட்டி கட்டப்பட்டுள்ளது. நவீன இறைச்சி கூடாரத்தில் ஆடுகளை வெட்டுவதற்கு 20 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நவீன இறைச்சி கூடாரம் கடந்த ஜூலை 7 ம் தேதி திறக்கப்பட்டது. சேலம் குகை பகுதியில் ஏற்கனவே மாநகராட்சிக்கு சொந்தமான அறுவைமனை உள்ளது. அறுவைமனையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய நடத்தப்பட்ட ஏலத்தில் கலந்து கொண்ட சரவணன் என்பவர் 2010-11 ம் ஆண்டுக்கான உரிமம் பெற்றுள்ளார். பல ஆயிரம் ரூபாய் முன்பதிவு மற்றும் சால்வன்சி தொகை செலுத்தி அறுவை மனை ஏலம் எடுக்கப்பட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட அறுவைமனை உள்ள இந்த பகுதியில் ஆடுகளை அறுக்க 20 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சேலம் மாநகராட்சி 45 வது வார்டில் இருந்து 60 வது வார்டு வரை உள்ள அனைத்து பகுதியில் இருக்கும் இறைச்சி கடை வியாபாரிகளும் நவீன இறைச்சி கூடாரத்துக்கு வருகை புரிந்தனர். எனவே, குகை அறுவைமனை பகுதியை ஏலம் எடுத்தவர், “தனக்கு நஷ்டம் ஏற்படுவதால் செலுத்திய முன்பணத்தொகையை திரும்ப வழங்குமாறு‘ மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் உண்மை என்பது தெரிய வந்தது. எனவே, குகை அறுவை மனை பகுதியை ஏலம் எடுத்துவர் செலுத்திய முன்பண தொகையை திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது. நடப்பு 2010-11 ம் ஆண்டு குகை அறுவைமனை பகுதியில் துறை ரீதியாக கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாநகராட்சிக்கு மேலும் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது