தினமலர் 08.09.210
திண்டிவனம் நகராட்சி புதிய கட்டடம்:நிதி ஒதுக்கியும் பணிகள் துவங்கவில்லை
திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.திண்டிவனம் நகராட்சி அலுவலகம் சிறிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இடப்பற்றாக்குறை காரணமாக அலுவலகத்திற்கு 1 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
இதில் அரசு மானியத் தொகையான 30 லட்சம் ரூபாய் நிதியை கடந்த 2008ம் ஆண்டு மே 22ம் தேதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. கடந்த 2009ம் ஆண்டு ஆக. 20 ம் தேதி, செப். 11, அக். 8 மற்றும் 28, நவ. 25ம் தேதிகளில் தொடர்ந்து 5 முறை டெண்டர் அறிவிக்கப்பட்டது.கடைசியாக டிச. 17ம் தேதி விடப்பட்ட டெண்டரை புதுச்சேரி கணேஷ் குமார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனம் எடுத்தது. இந்த நிறுவனத்தின் ஏலத் தொகை அதிகமாக இருந்ததால், விலை குறைப்பு கடிதம் வழங்குமாறு ஒப்பந்த புள்ளி பரிசீலனை குழு அறிவுறுத்தியது. கணேஷ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தினரிடமிருந்து விலை குறைப்பு கடிதம் கடந்த 2010ம் ஆண்டு பிப். 11ம் தேதி பெறப் பட்டது. இந்த தொகையும் அதிகமாக இருந்ததால் மீண்டும் விலை குறைப்பு கடிதம் கேட்கப்பட்டது. ஒப்பந்தப் புள்ளி மதிப்பீட்டை விட 9.70 சதவீதம் கூடுதலாக நிர்ணயம் செய்து அந்த நிறுவனம் கடிதம் வழங்கியுள்ளது.
இந்த தொகை நகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வராததால் டெண்டர் முடிவு நகராட்சி நிர்வாக இயக்குனரின் தலைமையிலான ஒப்பந்தப் புள்ளி பரிசீலனை குழுவிற்கு அனுப்பி வைக்கப் பட்டது.அந்த குழுவினர் ஒப்பந்ததாரரிடம் பதிவு சான்றிதழ், வில்லங்க சான்று உட்பட சில சான்றுகளை கேட்டனர். ஆனால் புதுச்சேரியில் வசிப்பதால் இவைகள் தன்னிடம் இல்லை என்று அந்த நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார். எனவே அவரது ஒப்பந்த புள்ளியும் ரத்து செய்யப்பட்டு, புதிய ஒப்பந்த புள்ளி கோரப்பட உள்ளது. அரசு நிதி ஒதுக்கி 2 ஆண்டுகளாகியும் இதுவரை டெண்டர் கூட விடாததால், அரசு மானியத் தொகை திரும்பி செல்லும் நிலை உருவாகியுள்ளது.திண்டிவனம் நகராட்சி புதிய கட் டடப் பணியை துவக்க நகர் மன்ற சேர்மன் மற்றும் அதிகாரிகளும் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.