தினமணி 08.09.2010
அபிராமத்தில் அரசு மருத்துவமனை: பேரூராட்சித் தலைவர் வலியுறுத்தல்
கமுதி, செப். 7: ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் அரசு மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று பேரூராட்சி தலைவர் பி.எஸ்.கணேசன் (எ) கணேஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்கிழமை அவர் தெரிவித்தது:
அபிராமத்தில் மக்கள்தொகை அதிகரித்து பேரூராட்சி தகுதி ஆகியும் கூட அபிராமத்தில் அரசு மருத்துவமனை இல்லாதது வேதனை அளிக்கிறது. இலவச மருத்துவ உதவி கிடைக்காமல் ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அபிராமம் அருகில் நத்தம் ஊராட்சியில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் பேரூராட்சி நிலையில் உள்ள அபிராமத்தில் துணை சுகாதார நிலையத்தைக் கூட அரசு தொடங்காதது வியப்பாக உள்ளது.
எனவே அமைச்சர் சுப. தங்கவேலன், கே.முருகவேல் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குனர், பரமக்குடி கோட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஆகியோர் துரித நடவடிக்கைகள் எடுத்து அபிராமத்தில் தற்போது உடனடியாக ஆரம்ப சுகாதார துணை நிலையமாவது தொடங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இதற்கு துணை சுகாதார நிலையத்துக்கு இடவசதியை பேரூராட்சி அலுவலக வளாகப் பகுதியில் செய்து தர தயாராக உள்ளோம். குறிப்பிட்ட காலத்துக்குள் அபிராமத்தில் அரசு முழுமையான மருத்துவமனையும் தொடங்கப்பட வேண்டும் என்றார்.