தினகரன் 09.09.2010
தினகரன் தொடர் செய்திகள் எதிரொலியாக அகற்றிய நகராட்சி நூற்றாண்டு தூண் மாநகராட்சி வளாகத்தில் நிறுவ முடிவு
மதுரை, செப். 9: தினகரன் தொடர் செய்திகள் எதிரொலியாக நெரிசல் தீர்க்கும் நடவடிக்கையாக மதுரை பெரியார் பஸ்நிலைய பகுதியில் அகற்றப்பட்ட நகராட்சி நூற்றாண்டு நினைவுத் தூண், மாநகராட்சி வளாகத்திற்குள் நிறுவப்படுகிறது.
மதுரை நகரசபை நூற்றாண்டு(1866&1966) விழாவை முன்னிட்டு பெரியார் பஸ் நிலையம் எதிரே 1969 ஏப்.13ல் முதல்வர் கருணாநிதி ஒரு நினைவுத் தூணை திறந்து வைத்தார். கடந்த 1866ல் நகரவைத் தலைவராக இருந்த வி.எச்.லிவிங் துவங்கி, 1964ல் இருந்த ராமகிருஷ்ணன் வரை தலைவர்கள் பட்டியலும், உச்சியில் சிங்க முகங்கள் அசோகச் சக்கரம் கொண்ட தேசியச் சின்னத்துடன் இத்தூண் கலைநயம் கொண்டிருக்கிறது.
வரலாற்று அடையாளம் எனினும், இத்தூண் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தந்தது. மதுரை போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் கடந்த ஜனவரியில் இந்த தூணைச் சுற்றிய ரவுண்டானாவை அகற்றினார். வாகனங்கள் மோதி நினைவுத்தூண் நொறுங்கும் ஆபத்து குறித்தும், இதனை வேறிடத்தில் மாற்றி வைக்கவும் அப்போதே தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நினைவுத்தூணைச் சுற்றி பாதுகாப்பு இரும்பு கம்பித் தடுப்பினை கமிஷனர் பாலசுப்பிரமணியன் ஏற்படுத்தினார்.
நெரிசலுக்கு காரணமான இத்தூணை அகற்றி வேறிடத்தில் அதாவது இன்றைய மாநகராட்சி வளாகத்திற்குள்ளேயே அமைக்க மாநகராட்சி, போலீஸ், மாவட்ட நிர்வாகம் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள தினகரனில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன. இதன் எதிரொலியாக ஜூலை 19ல் இத்தூணை மாற்றி வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கமிஷனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தின இரவில் நினைவுத்தூண் இவ்விடத்திலிருந்து பொக்லைன் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
போலீசார், மாநகராட்சியினர் இணைந்து சுமார் 2மணிநேர முயற்சியில் இத்தூண் அகற்றப்பட்டது. ஒரு பொக்லைன், மாநகராட்சி மின் பல்புமாட்டும் வாகனம் என இரு வாகன உதவியில் அடுக்கடுக்கான 8 பகுதிகளும் எவ்வித சேதமும் இன்றி எடுக்கப்பட்டன. இந்த தூண் அகற்றப்பட்டதால் இவ்விடத்தில் நெரிசல் குறைந்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மதுரை மாநகராட்சி வளாகத்திற்குள் ஏற்கனவே வெள்ளிவிழா நினைவுத்தூண், உலகத்தமிழ் மாநாட்டு நினைவு ஸ்தூபி உள்ளிட்டவை உள்ளன. எனவே இந்த நகராட்சி நூற்றாண்டு நினைவுத்தூணையும் மாநகராட்சி வளாகத்திற்குள் முக்கிய இடத்தில் வைக்க, கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்’ என்றார்.