தினமலர் 09.09.2010
மதுரை மாநகராட்சி பழத்தோட்டம் யாருக்கு சொந்தம்?
மதுரை:மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என பல ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், வருவாய் துறையினர் வசம் சென்றது. இது தங்கள் இடம் என வருவாய் துறையினர் கூறுகின்றனர்.மதுரை கருப்பாயூரணியில் ரிங் ரோட்டின் அருகே “மாநகராட்சி பழத்தோட்டம்‘ என்ற இடம் இருக்கிறது. 8.5 ஏக்கர் பரப்பளவில் பெரிய மரங்களுடன் காடு போல் இந்த இடம் காட்சி அளிக்கிறது. தூரத்தில் இருந்து பார்த்தாலே பச்சை பசேல் என காட்சி அளிக்கும் இந்த இடம், அப்பகுதியிலேயே மரங்கள் அடர்ந்த இடமாக இருக்கிறது. இந்த இடத்தின் மதிப்பு, பல கோடி ரூபாய்.25 ஆண்டுகளுக்கு முன், இந்த இடத்தில் பழத்தோட்டம் அமைத்து, மாநகராட்சி பராமரித்துள்ளது. காலப்போக்கில், பராமரிப்பு இல்லாமல், இந்த இடம் புதர் மண்டிப்போனது.
பெரிய மரங்கள் மட்டுமே உள்ளன. பாதுகாக்கப்படாததால், சமூக விரோத செயல்களின் புகலிடமாக இந்த இடம் மாறி விட்டது.சில மாதங்களுக்கு முன்பு தான், இப்படி ஒரு இடம் இருப்பதே மாநகராட்சி அதிகாரி களுக்கு தெரிய வந்தது. கமிஷனர் செபாஸ்டின் மற்றும் அதிகாரிகள் இடத்தை நேரில் சென்று பார்த்து வந்தனர். மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டால், இந்த இடத்தை அலுவலகம் கட்ட அல்லது பூங்கா அமைக்க பயன்படுத் தலாம் என மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்தனர்.குழப்பம்: இதற்கிடையில், தங்களது ஆவணங்களில் இந்த இடம், “குளம்‘ என குறிப்பிடப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் கண்டுபிடித்தனர். இடத்தை ஆர்.டி.ஓ., தாசில்தார், ஆர்.ஐ., போன்றவர்களும் நேரில் ஆய்வு செய்தனர்.சமீபத்தில் வண்டியூர் தீர்த்தக்காட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு மாற்று இடமாக, பழத்தோட்டத்தை கொடுக்கலாம் என வருவாய் துறையினர் முடிவு செய்தனர். அரசுக்கும் இம்முடிவை தெரிவித்து விட்டனர். இதனால் இந்த இடத்தை பயன்படுத்தலாம் என நினைத்த மாநகராட்சியின் எண்ணம் நிறைவேறாமல் போனது. ஆனால், நல்லவேளையாக தனியார் ஆக்கிரமிப்பி லிருந்து தப்பியுள்ளது.