தினமலர் 09.09.2010
திருச்சி கலெக்டர் எச்சரிக்கை : போலி ஆவணம் மூலம் மனை விற்போர் மீது கடும் நடவடிக்கை
திருச்சி: “திருச்சி மாவட்டத்தில், வீட்டுமனைகளை போலி ஆவணத்தை காட்டியும், அரசு நிலத்தையும் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என கலெக்டர் சவுண்டை யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாநகரைச் சுற்றியுள்ள விமான நிலையம், திருவளர்ச்சிப்பட்டி, குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி, எல்லக்குடி, திருவெறும்பூர், கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், சோமரசம்பேட்டை, நாச்சிக்குறிச்சி, வயலூர், சமயபுரம், கண்ணனூர், மணிகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை மனைகளாக பிரித்து பல தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.
அவ்வாறு விற்பனை செய்யும் போது, அரசின் அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு என போலியான ஆவணத்தைக் காட்டி விற்பனை செய்து வருகின்றனர். மனைப்பிரிவுகளை அங்கீகாரம் செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநகராட்சி கமிஷனர், நகராட்சி, பஞ்சாயத்து ஆகியவற்றின் தலைவர் எவருக்கும் மனைகளை அங்கீகாரம் செய்யும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
அப்படி ஏதேனும் ஆவணம் காட்டப்பட்டால், அவை அனைத்தும் போலியானவை. எனவே, அந்த ஆவணத்தை நம்பி மனைப்பிரிவை வாங்குவோருக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாகாது. அவ்வாறு மனைப்பிரிவுகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம், அந்த நிலத்தை ஒட்டியுள்ள அரசு நிலத்தையும் சேர்த்து விற்பனை செய்வதாக புகார் வருகின்றன.
மாவட்ட நிர்வாகத்தால் அவற்றை விசாரணை செய்து அந்த நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் மனைப்பிரிவாக விற்பவர் மீதும், அவற்றை வாங்குபவர் மீதும் குணடர் தடுப்புச்சட்டம் உட்பட பல்வேறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. எனவே, நகர் பகுதிகளை ஒட்டி வீட்டு மனைப்பிரிவை பொதுமக்கள் வாங்கும் போது, உரிய கவனம் செலுத்தி வாங்க வேண்டும்.