தினமணி 09.09.2010
திருவொற்றியூர் நகராட்சியில் முறைகேடு: இணை ஆணையர் நேரில் விசாரணை
திருவொற்றியூர், செப்.8: திருவொற்றியூர் நகராட்சி மீதான பல்வேறு புகார்கள் குறித்து நகராட்சி நிர்வாக இணை ஆணையர் பி.மஹேஸ்வரி தலைமையில் உயர் அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
சென்னையை ஒட்டிய முக்கிய நகராட்சி திருவொற்றியூர். இங்குள்ள 48 வார்டுகளில் சுமார் 2.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ. 12 கோடிக்கும் அதிகமாக நிதி வருவாய் இருந்தும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் முற்றிலும் மோசமான நிலையில் உள்ளன. குண்டும் குழியுமான சாலைகள், தெருவெங்கும் குப்பைகளின் துர்நாற்றம், குடிநீர் தட்டுப்பாடு என பொதுமக்கள் அவதிப்படும் சூழ்நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் டெண்டர் பணிகளில் நீண்ட நாள்களாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக புகார் எழுந்தன. டெண்டர் பெட்டியில் தண்ணீர் ஊற்றி விண்ணப்பங்கள் அழிக்கப்பட்டன. உண்மையான ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் கிடைப்பதில்லை என்ற நிலை ஏற்பட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒப்பந்ததாரரின் டெண்டர் படிவத்தையும், கே.வி.பி பத்திரத்தையும் அதிகாரிகள் காணாமல் செய்து விட்டதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து இனி திருவொற்றியூர் நகராட்சியின் டெண்டர்கள் அனைத்தும் செங்கல்பட்டில் உள்ள நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் மட்டுமே நடைபெறும் என நகராட்சி நிர்வாக இயக்குநரகம் உத்தரவிட்டது.
குப்பை அள்ளுவதில் முறைகேடு: இந்நகராட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 19 வார்டுகளில் தனியார் மூலம் குப்பைகள் அள்ளப்படுகின்றன.
நாள்தோறும் சுமார் 20 டன்வரை குப்பைகள் லாரிகள் மூலம் அகற்றப்பட்டாலும் இருமடங்கு குப்பைகள் அகற்றப்பட்டதாக பில் தயாரிக்கப்பட்டப்பட்டு மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.12 லட்சம் வரை பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
இதில் கணிசமான தொகை முறைகேடு நடைபெறுவதாக பல முறை புகார் எழுந்துள்ளன.
மேலும் நகராட்சி டெண்டர் பணிகளில் சுமார் 35 சதம் வரை கமிஷன் வழங்கப்படுவதால் நகராட்சி சார்பில் நடைபெறும் சாலைப் பணிகள் உள்ளிட்ட வேலைகள் தரமற்று உள்ளதாகவும், இதற்கு காரணம் ஆளும் கட்சியினர்தான் எனவும் நகர்மன்ற தலைவர் ஜெயராமன் சில நாள்களுக்கு முன்பு பகிரங்கமாக புகார் தெரிவித்திருந்தார்.
இணை ஆணையர் 7 மணி நேரம் விசாரணை: நகராட்சி நிர்வாகம் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த நகராட்சி நிர்வாக இணை ஆணையர் பி.மஹேஸ்வரி, கூடுதல் இயக்குநர் வி.பிச்சை உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் திருவொற்றியூர் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
அப்போது குப்பைகள் அகற்றல், டெண்டர் பணிகளில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறிóத்து நகராட்சி ஆணையர் கலைச்செல்வன், நகர்நல அலுவலர், நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு துவங்கிய விசாரணை மாலை 5 மணிவரை நீடித்தது.
கவுன்சிலர் பேட்டி: இது குறித்து விசாரணையில் பங்கேற்ற 10-வது வார்டு கவுன்சிலர் டோக்கியோ வி.மணி கூறியது,
திருவொற்றியூர் நகராட்சியில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து விரிவான புகார் ஒன்றை உள்ளாட்சித் துறை செயலாளரிடம் அளித்திருந்தோம். இதில் ஆதாரங்களையும் இணைத்திருந்தோம்.
இதன் அடிப்படையில் நடைபெறும் விசாரணைக்கு வருமாறு எனக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இது குறித்து புதன்கிழமை இணை ஆணையர் விசாரணை நடத்தினார்.
குப்பை அகற்றல், டெண்டர் உள்ளிட்டவைகளில் நகராட்சியில் தொடரும் முறைகேடுகள் குறித்து விளக்கமாக விசாரணையின்போது தெரிவித்தேன். அரசியல்வாதிகளுக்கு உறுதுணையாக இருந்து, முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றார் மணி.