தினமணி 09.09.2010
திருப்பரங்குன்றத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
திருப்பரங்குன்றம், செப். 8: திருப்பரங்குன்றம் நகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வார்டாக சென்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்துவது என நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி நகராட்சித் தலைவர் இரா.காந்திமதி தலைமையில் நகராட்சியின் விரிவாக்கப் பகுதியான பாம்பன் பகுதிக்கு, வைகை கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை நீட்டிக்க முடியுமா என ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அப்பகுதி மக்களிடம் வீடுவீடாகச் சென்று குறைகளைக் கேட்டார் நகராட்சித் தலைவர். அப்போது, வைகை குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் கட்டித் தர மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சார்பில் கூறப்பட்டது.
முகாமில் நகராட்சி நிர்வாக அதிகாரி (பொறுப்பு) மு.பூங்கொடி, துப்புரவு ஆய்வாளர் இளையராஜா, கவுன்சிலர்கள் எம்.ஆர்.பி.ஆறுமுகம், ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.