தினமணி 09.09.2010
பாதாள சாக்கடைப் பணிகளை கண்காணிக்க குழு அமைக்க நுகர்வோர் அமைப்பு கோரிக்கை
தூத்துக்குடி, செப். 8: தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என, மாவட்ட நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இச்சங்கத்தின் தலைவர் ஆ. சங்கர், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு:
சார் ஆட்சியர் தலைமையில் தொலைபேசித் துறை, மாநகராட்சி, காவல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், தனியார் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நுகர்வோர் ஆர்வலர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவை உடனே அமைத்து பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பல இடங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்கள் மூலம் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் நடைபெற்று வருகிறது.
பாதாள சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்படும்போது தொலைபேசி தொடர்புகளையும், குடிநீர் இணைப்புகளையும் கவனம் இல்லாமல் துண்டித்து விடுகின்றனர்.
இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அதோடு தொலைபேசி துறைக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.
குறிப்பாக ஆழமாக தோண்டப்பட்ட இடங்களில், வேலை நடைபெறுகிறது என்ற அறிவிப்புப் பலகை, பகலிலும் இரவிலும் தெரியும் வண்ணம் அமைக்க வேண்டும். வேலையாள்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் போன்ற எவ்விதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்படுவதில்லை.
அண்மையில், இதன் காரணமாக மேலூர் ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பயணியும் குழந்தையும் குழிக்குள் விழுந்து காயமடைந்தனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் உடனே இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு பாதாள சாக்கடைப் பணி நடைபெறும் இடங்களில் ஒப்பந்தக்காரர் பெயர், பணியின் கால அளவு அறிவிப்பு பலகை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற ஆவண செய்ய வேண்டும் என்றார் அவர்.