தினமலர் 15.09.2010
டவுன் பஞ்., அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா
கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த தாராசுரம் டவுன் பஞ்சாயத்து புதிய அலுவலகத்தை தமிழக நிதியமைச்சர் அன்பழகன் நேற்றுமுன்தினம் திறந்து வைத்தார்.தாராசுரம் டவுன் பஞ்சாயத்தில் டவுன் பஞ்சாயத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 12.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட டவுன் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக கூடம் ஆகியவற்றை நிதியமைச்சர் அன்பழகன் ரிப்பன் வெட்டி, கல்வெட்டை திறந்து வைத்தார்.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் தலைமை வகித்தார். கலெக்டர் சண்முகம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கல்யாணசுந்தரம், அன்பழகன், தாராசுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சரஸ்வதிஅம்மாள், முன்னாள் தலைவர் அசோக்குமார், செயல் அலுவலர் மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.நிதியமைச்சர் அன்பழகன் பேசுகையில், “”தாராசுரம் டவுன் பஞ்சாயத்தில் 2008 – 09ம் ஆண்டில் அனைத்து டவுன் பஞ்சாயத்து அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நான்கு முக்கிய சாலைகள் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. 3,165 குடும்பங்களுக்கு இலவச “டிவி‘ வழங்கப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் அருகில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.””இதுபோல், பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அடிப்படை வசதிகள் பாரபட்சம் இல்லாமல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக,” தெரிவித்தார்.