தினமலர் 15.09.2010
குழந்தை வளர்ச்சி திட்ட கருத்தரங்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
திருச்சி: திருச்சி மாநகராட்சியில், கவுன்சிலர்களுக்காக நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்-2 குறித்த கருத்தரங்கில் மேயர், துணைமேயர் மற்றும் நான்கு கோட்டத் தலைவர்கள் உள்பட பெரும்பாலன கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 0 – 6 வயது குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் என அனைவருக்கும் சத்துணவு, ஊட்டச்சத்து, சுகாதாரக்கல்வி, இரும்புசத்து மாத்திரை, தொழில்கல்வி வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.திருச்சி மாவட்டத்தில் 1982ம் ஆண்டு இத்திட்டம் துவங்கப்பட்டது. திட்டம் 1ல் 121 மையம், திட்டம் 2ல் 121 மையம் என மொத்தம் 242 மையம் செயல்படுகின்றன. திருச்சி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உச்சநீதிமன்ற அறிவுரைப்படி இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.அதன்படி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் குறித்த கருத்தரங்கம் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களுக்காக நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு, மேயர் சுஜாதா, துணைமேயர் அன்பழகன், கோட்டத் தலைவர்கள் உள்பட பெரும்பாலன கவுன்சிலர்கள் வரவில்லை. வந்த சில கவுன்சிலர்களும் தாமதமாகவே வந்துவிட்டு, கூட்டத்தை விரைந்து முடிக்க பரபரத்தனர்.கமிஷனர் பால்சாமி தலைமை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் ரேவதி, “”குழந்தைகள், கர்பிணிகளுக்கு சத்தாண உணவு, சுகாதார கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உங்கள் பகுதியைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் மூலம் உதவிகளை பெற்றத் தரவேண்டும்,” என்றார்.கவுன்சிலர்களுக்கு, “கவுன்சிலிங்‘ வழங்குவதற்காக நடத்தப்பட்ட கருத்தரங்கில் கவுன்சிலர்கள் பெரும்பாலும் கலந்து கொள்ளவில்லை. இப்படியிருந்தால் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் எப்படி வெற்றி பெரும் என்பது அதை செயல்படுத்தும் அரசுக்கே வெளிச்சம்.