தினமலர் 16.09.2010
தரமற்ற சாக்கடை கால்வாயை இடிக்க உத்தரவு
திருப்பூர்: திருப்பூர் கரட்டாங்காடு பகுதியில் தரமில்லாமல் சாக்கடை கால்வாய் கட்டப் பட்டது. அப்பணியை ஆய்வு செய்த துணை மேயர், கால்வாயை இடித்துவிட்டு மீண்டும் தரமாக கட்டுமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். திருப்பூர் மாநகராட்சி பகுதி யில், தமிழக அரசு ஒதுக்கிய 40 கோடி ரூபாய் சிறப்பு நிதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி, பல பகுதிகளில் தரமில்லாமல் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதுடன், கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குறைகளையும், புகார்களையும் ஒப்பந்ததாரர்கள் கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த மாமன்ற கூட்டத்திலும் இப்பிரச்னை வெடித்தது. சாக்கடை கால்வாய் பணி தாமத மாக நடப்பதை சுட்டிக்காட்டி, இந்திய கம்யூ., கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இந்நிலையில், துணை மேயர் செந்தில்குமார், 50வது வார்டு பகுதியில் நடந்து வரும் சாக்கடை கால்வாய் கட்டும் பணியை நேற்று ஆய்வு செய்தார். கரட்டாங்காடு பஸ் ஸ்டாப் பகுதியில் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாயை பார்வையிட்ட போது, அப்பணி தரமில்லாமல் இருந்தது தெரிய வந்தது. கால்வாயை இடித்து விட்டு, மீண்டும் தரமாக கட்ட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.
துணை மேயர் செந்தில்குமார் கூறியதாவது: சாக்கடை கால்வாய் கட்டும் போது, “வைபரேட்டர்‘ என்ற இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். அப்போது, மண், கற்கள், சிமென்ட் கலவை இறுக்கமாக பிடித்து, உறுதியான முறையில் கால்வாய் அமையும்; சந்து, பொந்து இல்லாமல், கால் வாய் சிறப்பாக இருக்கும். அந்த இயந்திரத்தை பயன்படுத்தா விட்டால், இக்கலவை உறுதி யாக நிற்காமல் பெயர்ந்து விடும். கரட்டாங்காடு பஸ் ஸ்டாப் பகுதியில், கட்டிய கால்வாயை பார்வையிட்ட போது, 15 அடி தூரத்துக்கு மூன்றடி வீதம் மூன்று இடங்களில் “வைப ரேட்டர்‘ இயந்திரத்தை பயன் படுத்தாமல் கால்வாயை கட்டியிருப்பது தெரிந்தது; அந்த இயந்திரம் பழுதானதால் பயன்படுத்தவில்லை என்று கூறினர். எனவே, கட்டிய வரை இடித்துவிட்டு “வைபரேட்டர்‘ இயந்திரத்தை பயன்படுத்தி, தரமான முறையில் புதிதாக கால்வாய் கட்ட அறிவுறுத்தப் பட்டது, என்றார்.