தினகரன் 16.09.2010
கோவை மாநகரை மேம்படுத்த வியூகம் : ஜெர்மனி சென்று வந்த மேயர், கமிஷனர் பேட்டி
கோவை : “”கோவை நகரை மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்த வியூகம் வகுத்துள்ளோம்.பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு இருந் தால் புதிய திட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வரும்,” என, மாநகராட்சி மேயர் வெங்கடாசலம்,கமிஷனர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் கூறினர்.
கோவை நகரை மேம்படுத்த மாவட்ட கலெக்டர் உமாநாத், மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, அரசு சாரா அமைப் பான எஸ்காம் தலைவர் அகிலா உள் ளிட்ட 11 பேர் அடங்கிய குழு கடந்த 8ம் தேதி ஜெர்மனி சென்றது; செப்., 14ம் தேதி கோவை திரும்பினர்.
கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கலெக்டர் உமாநாத், மேயர்வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெர்மனி நாட்டின் ஆம் நெக்கர் நகரை பார்வையிட்டு, ஒப்பந்தம் மேற்கொள்ள அரசு முறை பயணமாக சென்றோம். எஸ்லிங்கன் ஆம் நெக்கர் மாநகரம் நன்கு வளர்ச்சி பெற்றது. உட்கட்டமைப்பு, குடிநீர், போக்குவரத்து மேலாண்மை, பாதாளசாக்கடை, திடக்கழிவு மேலாண்மை முதலிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
இங்குள்ள தொழிற்சாலைகள், மாநகர பொதுப்பணித்துறை அலுவலகம்,திடக்கழிவிலிருந்து வெப்பஆற்றல் தயாரிக்கும் தொழிற்கூடம், மாநகர பொதுமருத்துவமனை, மாநகரத்தின் பிரதான மற்றும் முக்கிய சாலைகள், பென்ஸ் கார் உற்பத்தி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டோம். பூங்கா, புகழ்பெற்ற ஆமெர்ஏரி, படகு துறையை பார்வையிட்டோம். பின், எஸ்லிங்கன் ஆம் நெக்கர் மாநகர் மற்றும்ம் கோவை மாநகராட்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள சில பொருட்கள் மீதான வரைவு ஒப்பந்தம் தயாரிக்க முடிவானது.
கலெக்டர் உமாநாத் கூறுகையில், “”இந்நகரின் மக்கள் தொகை 1.65 லட்சம். அங்குள்ள மக்களின் தேவை அதிகம். அதற்கேற்ப கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை விட கோவை நகரின் மக்கள் தொகை நான்கு மடங்கு அதிகம். அதே போல வசதிகளை இங்கு ஏற்படுத்த முடியாது. நம்நாடு வளர்ந்து வரும் நாடு. ஜெர்மனி வளர்ந்த நாடு; அதோடு நாம் ஒப்பீடு செய்யக்கூடாது. ஆனால் அங்குள்ள தொழில் நுட்பத்தை நாம் நம் மக்கள் தொகைக் கேற்ப மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். அங்குள்ள முக்கியமான திட்டங்களை செயல்படுத்திக் கொள்ளலாம்,” என்றார்.
இதையடுத்து பேசிய கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, “”கோவை நகரை மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்த வியூகம் வகுத்துள் ளோம்.பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு இருந்தால் புதிய திட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வரும். தமிழகத்தின் முன்னோடி மாநகராட்சியாக உருவாக்க முடியும்,” என்றார்.