தினமணி 17.09.2010
கவின்மிகு தஞ்சை தூய்மைப் பணி திட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூர், செப். 16: பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்– தஞ்சாவூர் நகராட்சி ஆகியன இணைந்து மேற்கொள்ளும் கவின்மிகு தஞ்சை தூய்மைப் பணித் திட்ட உறுப்பினர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, கவின்மிகு தஞ்சையை உருவாக்க பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், தஞ்சை நகராட்சியும் இணைந்து செயல்படவுள்ளன.
அதற்கான கவின்மிகு தஞ்சையின் உறுப்பினர்கள் கூட்டம் பெரியார் சமூக தொடர்கல்வி கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்தில் கவின்மிகு தஞ்சை திட்டத் தலைவரும் பல்கலை. துணைவேந்தருமான நல். ராமச்சந்திரன் பேசியது:
தஞ்சை நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் உள்ள மக்களிடையே தஞ்சையை தூய்மையாக வைத்துக்கொள்ள அந்தந்தப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களையும் ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நகராட்சி மண்டல இயக்குநர் சாந்தி பேசியது:
பெரிய கோயிலைச் சுற்றியுள்ள அகழியை எப்படி நல்ல முறையில் பாதுகாப்பது என்று மத்திய தொல்லியல் துறை முயற்சி எடுத்து வருகிறது. அதனோடு நகராட்சியும் இணைந்து செயல்படுவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.
நகராட்சி ஆணையர் த. நடராஜன் பேசியது:
தஞ்சையை தூய்மையாக வைத்திருக்க தேவையான துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். எவ்வளவுதான் நகராட்சிப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால், அந்தப் பணியை சிறப்பாகச் செய்ய இயலாது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் தேவையற்ற குப்பைகள் சேராமலும், நகராட்சி குப்பைத் தொட்டியை பயன்படுத்தவும் வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.