தினமலர் 23.09.2010
அஜண்டா கிழிப்பு, மினிட் புக் “அபேஸ்‘ தென்காசி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
தென்காசி: தென்காசி நகராட்சி கூட்டத்தில் அஜண்டா கிழிப்பு, மினிட் புக் அபேஸ் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி நகராட்சியின் அவசர கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் கோமதிநாயகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் இப்ராகிம், கமிஷனர் செழியன் முன்னிலை வகித்தனர். தென்காசி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் மேற்கொள்ளப்படும் 55 பணிகள் தேர்வு செய்து 4 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அரசு தென்காசி நகராட்சியில் 25 வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள 3 கோடியே 51 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் விடுபட்டு போன வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் ஆவேசம் அடைந்து தங்கள் வார்டு பகுதிக்கு
வளர்ச்சி பணிகள் வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:
ராசப்பா: எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது. வார்டில் வளர்ச்சி பணிகள் நடப்பது இல்லை. இதுபற்றி தீர்மானமும் இல்லை.
செய்யது சுலைமான்: என் வார்டு வேலை என்ன ஆனது. நான் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எனது வார்டு பணிகள் விடுபட்டு போன மர்மம் என்ன? இதற்கு விடை தெரியாமல் கூட்டத்தை நடத்த விடமாட்டேன்.
ராசப்பா: வார்டு புறக்கணிக்கப்படுகிறது. பின்னர் எதற்கு அஜண்டா. (இவ்வாறு கூறிய அவர் திடீரென கையில் வைத்திருந்த அஜண்டாவின் நகலை கிழித்து எறிந்தார். அப்போது கவுன்சிலர் செய்யது சுலைமான் எதற்கு மினிட் புக் என்று கூறி தலைவர் மேஜை மீதிருந்த மினிட் புக்கை கையில் எடுத்து கொண்டு வெளியேற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.)
துணைத் தலைவர்: மினிட் புக் அரசுக்கு சொந்தமானது. அதனை யாரும் எடுத்து கொண்டு செல்ல முடியாது. மினிட் புக்கை கொடுத்து விட வேண்டும். செய்யது சுலைமான்: முடியாது. எனக்கு பதில் கிடைக்காமல் மினிட் புக்கை தர மாட்டேன். (இவருக்கும், துணைத் தலைவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் மினிட் புக்கை துணைத் தலைவர் வாங்கி கொண்டார். பின்னர் அதனை நகராட்சி அலுவலக ஊழியர் பெற்றுக் கொண்டார்.)
தலைவர்: நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள 4 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் மதிப்பீடு செய்து அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டது. அரசு 3 கோடியே 51 லட்சம் ரூபாய்தான் ஒதுக்கீடு செய்துள்ளது. 55 பணிகளில் 25 பணிகளுக்குத்தான் அனுமதி கிடைத்துள்ளது. ( இப்பிரச்னை குறித்து கவுன்சிலர்கள் சுடலை, கசமுத்து, முகம்மது உசேன், நாகூர்மீரான், முகபிலாஷா, ராசப்பா, செய்யது சுலைமான் உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.)
தலைவர்: 33 வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் வகையில் விடுபட்டு போன வார்டுகளில் நகராட்சி பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.ரபிக்காள்: எனது வார்டில் பயனில்லாமல் உள்ள நகராட்சி கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.துணைத் தலைவர்: நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.சுடலை: கடந்த 4 வருடமாக நாய் தொல்லையை ஒழிப்போம் என்று கூறியும் நடவடிக்கை இல்லையே! ஏன்? இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.