தினமலர் 23.09.2010
பழைய சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் மாடி பார்க்கிங் : ரூ.12.6 கோடியில் மாநகராட்சி திட்டங்கள்
மதுரை : மதுரையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் 5.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாடி “பார்க்கிங்‘ அமைகிறது. இத்திட்டம் உள்பட 12.6 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறுதிட்டங்களுக்கு அக்.,3ம் தேதி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அடிக்கல் நாட்டுகிறார்.
மதுரையில் புராதனசின்னங்கள் அமைந்துள்ள இடங்களை மேம்படுத்த, மத்திய சுற்றுலா துறை 12.6 கோடி ரூபாய் நிதிஅளிக்கிறது. இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. பழைய சென்ட்ரல்மார்க்கெட் இருந்த இடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கார் “பார்க்கிங்‘ அமைகிறது. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி, ஒரு கி.மீ., சுற்றளவிற்கு உயரக் கட்டுப்பாடு உள்ளதால், 4.5 மீட்டர்உயரத்திற்கு, 500 கார்கள்நிற்கும்வகையில், “பார்க்கிங்‘ கட்டடம் கட்டப்படும்.
வரவேற்பு அறை, பொருட்கள் வைப்பு அறை, கழிப்பறை போன்றவையும் இங்கு அமைக்கப்படும். புது மண்டபத்தில் உள்ள சிற்பங்களை பொதுமக்கள் பார்வையிட வகை செய்யும் விதத்தில், அங்குள்ளகடைகள் காலி செய்யப்பட உள்ளன. இக்கடைகள் அருகில் உள்ள குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்படும். இதற்காக, குன்னத்தூர் சத்திரத்தில் 2.32 கோடி ரூபாய் செலவில் கடைகள் கட்டப்பட உள்ளன.
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி தற்போது புல் தரை அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை மேலும் அழகுபடுத்தும் பொருட்டு, இங்கு அலங்கார மின் விளக்குகள், 42.56 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். கோயிலின் அருகே உள்ள மீனாட்சி பூங்கா, 35.24 லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தப்
படும். பழமையை பாதுகாக்கும் பொருட்டு, 28.85 லட்சம் ரூபாய் செலவில் விளக்குத்தூண் அழகுபடுத்தப்படும். 75 லட்சம் ரூபாய் செலவில் தெற்கு மண்டல அலுவலகம் அமைந்துள்ள கோட்டை புதுப்பிக்கப்படும்.
மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீரை தேக்கி, அழகுபடுத்த 3.10 கோடி ரூபாய் செலவிடப்படும். பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வழியை காட்டும் போர்டுகள், 19 லட்சம் ரூபாய் செலவில் வைக்கப்படும்.
அடிக்கல்: அனைத்து திட்டங்களுக்கும் ஒரே இடத்தில், அக்.,3ம் தேதி நடக்கும் விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அடிக்கல் நாட்டுகிறார். நேற்று காலை திடீரென மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த அழகிரி, மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், துணை மேயர் மன்னன், தலைமை பொறியாளர் சக்திவேல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட தி.மு.க., செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு, மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பின் நிருபர்களிடம் பேசிய அழகிரி, “”அடிக்கல் விழாவின் போது, மேலவாசலில் வீட்டுவசதி வாரியம் கட்டியுள்ள வீடுகளும் திறக்கப்படும்” என்றார்.