னகரன் 28.09.2010
தாராபுரம் நகராட்சியில் வரி குறைப்பு தீர்மானத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
தாராபுரம், செப்.28: தாராபுரம் நகராட்சியில் வரி குறைப்பு தீர்மானத்தை நிறைவேற்றாததால் வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக கவுன்சிலர் வரதராஜன் கூறியுள்ளதாவது:
தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தால் வீடு மற்றும் தொழில் கூடங்களுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டது.அது நகர மன்றக் கூட்டத்தில் தீர்மானத்திற்கு கொண்டு வந்தபோது, வீடுகளுக்கு 25 சதவீதம் உயர்த்தப்பட்டதை 15 சதவீதமாகவும், தொழில் கூடங்களுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டதை 30 சதவீதமாகவும் குறைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முதல் கூட்டத்தில் 30 உறுப்பினர்களில் கலந்து கொண்ட 26 பேர் ஆதரவு தெரிவித்தினர். பின்பு மீண்டும் பரிசீலிக்கப்பட்டு அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவு கோரியபோது கலந்து கொண்ட 22 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதன் அடைப்படையில் வரி குறைப்பை ஏற்று நக ராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண் டோம். வரி குறைப்பு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பல வகையில் தெரிவிக்கப்பட்டும் வந்தது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் நகர மன்ற ஒப்புதலுக்கு முன் என்ன வரி உயர்த்தி இருந்ததோ அதே வரியை வசூல் செய்ய முடிவு செய்து, வரி வசூலில் இறங்கியது. பொது மக்களும் வியாபாரிகளும் வரி செலுத்துவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் 100 சதவீத வரி வசூல் செய்யப்படும் நகராட்சிகளில் தாராபுரம் நகராட்சியும் ஒன்றாக இருந்து சாதனை படைத்ததும் உண்மை. ஆனால் தற்போது வரி வசூல் ஆகாததற்கு காரணம், வரி குறைப்பை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது தான். எனவே நகராட்சி நிர்வாகம் நகராட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நகர மன்ற தீர்மானத்தின் படி வரி வசூல் செய்ய முன் வரவேண்டும். இல்லையேல் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உயர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு திமுக கவுன்சிலர் வரதராஜன் கூறியுள்ளார்.