தினமலர் 28.09.2010
அங்கீகாரமற்ற “லே–அவுட்‘: வாங்கிய பின் சிக்கல் வரும்… உஷார்!
பேரூர்: கோவை, புறநகரிலுள்ள கிராம ஊராட் சிகளில் அங்கீகாரமற்ற “லே–அவுட்‘ விற் பனை அதிகரித்துள்ளது. வெளியூரை சேர்ந்த பலர், இவற்றை வாங்கி ஏமாற்றமடைகின்றனர்.கோவை புறநகரான பேரூர், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை பகுதிகளில் விவசாய நிலங்கள் பல விற்பனைக்கு வந்துள் ளன. இவற்றை, மொத்தமாக விற்பனை செய்வதை விட, “லே–அவுட்‘ ஆக பிரித்து விற்றால் அதிக லாபம் ஈட்ட முடியும் என பல விவசாயிகள் கருதினர். அதோடு, பல புரோக்கர்கள், ரியல் எஸ் டேட் செய்வோர் பலர் லே–அவுட்டாக பிரித்து விற்பனை செய்ய துவக்கியுள்ளனர்.நிலத்தை விற்று பணத்தை ரொக்கமாக, வங்கியில் டிபாசிட்டாக செய்தால் அதில் வரும் வட்டியே போதும் என்ற மனநிலைக்கு மாறி விட்டனர். மாடிவீடு, கார் என குறிப்பிட்ட தொகைக்கு வாங்குகின்றனர். தொழிலுக்காக இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்கின்றனர். எனவே, இப்பகுதியில், பெரும்பாலான விளைநிலங்கள் விலையாகி வருகின்றன.
வெளியூர், உள்ளூரைச் சேர்ந்த புரமோட்டர்களும், இப்பகுதியில் முகாமிட்டு, விளைநிலங்களை வாங்குகின்றனர். சில மாதங்களில் மட்டும், பேரூர் பகுதியில், தீத்திபாளையம், மாதம்பட்டி, மத்வராயபுரம் ஊராட்சிகளில், அங்கீகாரமில்லாத “லே–அவுட்‘கள் நூற்றுக்கணக்கில் முளைத்துள்ளன. வெள்ளிமலைப்பட்டினம், நரசீபுரம், தேவராயபுரம், ஜாகீர்நாய்க்கன்பாளையம் ஊராட்சிகளில், “முதலீடு, குறைந்த விலை, இயற்கையான சூழல்‘ எனக்கூறி இடங்களை விற்கின்றனர்.
வெளியூரைச் சேர்ந்த வசதி படைத்த படித்தவர்கள் தான், அங்கீகாரமற்ற “லே–அவுட்‘களில் இடங்களை வாங்கி ஏமாற்றமடைகின்றனர்.இதுகுறித்து, ஊராட்சி தலைவர் ஒருவர் கூறியதாவது: விவசாயிகளின் பலவீனத்தை புரிந்து, குறைந்த விலைக்கு விளைநிலங்களை புரமோட்டர் வாங்குகின்றனர். ஊராட்சி நிர்வாகத்துக்கே தெரியாமல், சைட் போட்டு விற்று வருகின்றனர். இதுபற்றி விசாரிக்காமல், வெளியூர் பகுதிகளிலிருந்து வருவோர் போலியான “லே–அவுட்‘களை தெரியாமல் வாங்கி ஏமாறுகின்றனர். இதனால், பில்டிங் அப்ரூவலோ, மின், குடிநீர், ரோடு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வளர்ச்சிப்பணிகயையும் ஊராட்சி நிர்வாகம் மூலம் செய்ய முடியாது. புரமோட்டர்களுக்கு தங்கள் “லே–அவுட்‘ விற்றதும் வேலை முடிகிறது. ஆனால், போலியான “லே அவுட்‘ களை வாங்கும் பொதுமக்களுக்குத்தான் பாதிப்பு. இடம் வாங்க விரும்புவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் விபரம் கேட்டு வாங்குவது மிகவும் நல்லது.இவ்வாறு, ஊராட்சிதலைவர் தெரிவித்தார்.
மாயமாகும் அறிவிப்பு :ஊராட்சிகளின் அனுமதியில்லாமல் கட்டடம் கட்டப்பட்டால், 1997ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சி கட்டடங்கள் விதிகள்பிரிவு (34)ன்படி கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்துதல், இடித்து தள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து எச்சரிக்கை பலகைகள் சில மாதங்களுக்கு முன், தீத்திபாளையம் ஊராட்சி அலுவலகம் முன், பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக வைக்கப்பட்டது. தெனமநல்லூர் ஊராட்சி பகுதியில், “அரசு விதிகளின்படி ஊராட்சி அனுமதி பெறப்படாத மனைப்பிரிவு, இதில் கட்டடம் கட்ட ஊராட்சி மூலமாக அனுமதி வழங்கமுடியாது‘ எனக்கூறி, போலி “லே–அவுட்‘ முன்பு, ஊராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்ட, ஒரு சில வாரங்களிலே, மாயமாகி விடுகின்றன.