மாலை மலர் 28.09.2010
தியேட்டர்கள், வணிக வளாகங்களில் “பார்க்கிங்“கில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை மேயர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, செப். 28- சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
சைதைரவி: பன்றிக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மாநகராட்சி எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன?
மேயர் மா.சுப்பிரமணியம்:- ஒவ்வொரு மண்டபத்திலும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குடிசை பகுதியில் இருந்து வரும் மாணவ–மாணவிகள் படிக்கும் பள்ளிகள் கண்டறியப்பட்டு 400-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்று கவுன்சிலர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
டி.எஸ்.மூர்த்தி (பா.ம.க.):- மழை நீர் சேமிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு தரமான குடையும், மழைக்கோட்டும் வழங்க வேண்டும். பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்த நகர் முழுவதும் தடை விதிக்க வேண்டும்.
சைதை ரவி:- பெரிய கட்டிடங்கள், வணிக வளாகங்களில் கார் பார்க்கிங் இலவசமாக வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொசுவை கட்டுப்படுத்த சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விதிக்க வேண்டும்.
மீனா (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு):- ராயபுரம் ரேஸ் கார்டன் பகுதியில் தினம் தினம் மின் தடை ஏற்படுகிறது. மின் அழுத்தம் குறையும் உள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்களும் மாணவர்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் 23 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநகராட்சி சார்பில் 3 பல் மருத்துவமனகைள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக இளங்கோ நகர், செம்பியன், டி.பி.சத்திரம், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோட்டூர் புரம், வேளச்சேரி ஆகிய 7 இடங்களில் பல் மருத்துவமனைகள் தொடங்கப்படும்.
கடந்த 4 வருடங்களில் ரூ. 2 கோடியே 28 லட்சம் செலவில் பாலங்கள், சுரங்க பாதைகள் அழகுபடுத்தப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 23 தொடக்கப்பள்ளிகள், 18 நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், தியேட்டர்களில் ஒரு மணி நேரத்துக்கு இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் 25 ரூபாயும், கார் பார்க்கிங் 40 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும முறைப்படி இந்த கட்டணம் வசூலிக்கக் கூடாது.
இதை முறைப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும். இது தொடர்பாக விரைவில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.