தினகரன் 29.09.2010
நெல்லை மாநகராட்சியில் ‘நமது பூங்கா’ புதிய திட்டம் அறிமுகம்
நெல்லை, செப்.29: நெல்லை மாநகராட்சி எல்கைக்குள் குடியிருப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. புதிய காலனிகளில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலமாக மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவுகளில் பூங்கா அமைக்க திறந்தவெளி இடங்களும் சிறுவர் விளையாடும் இடங்களும் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் மாநகராட்சி அவ்விடங்களில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறது. நிதி நிலை ஆதாரம் சரியில்லை என்ற கருத்தை மாநகராட்சி தொடர்ந்து கூறி வருவதால், காலியிடங்களில் எவ்வித பணிகளும் நடக்கவில்லை. தற்போது நெல்லை மாநகராட்சி ஒரு புதிய முயற்சி யாக ‘நமது பூங்கா’ என்னும் திட்டத்தை நிறைவேற்ற உள்ளது.
பதிவு பெற்ற நகர்நல சங்கங்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். சம்பந்தப்பட்ட நலச்சங்கங்கள் விண்ணப்பித்தவுடன் மாநகராட்சியால் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதில் மொத்த தொகையில் 50 சதவீதத்தை நலச்சங்கமே ஏற்கவேண்டும். மீதமுள்ள 50 சதவீததொகையினை மாநக ராட்சி பொதுநிதியிலிருந்து வழங்கும். அதன் பின்னர் பூங்கா அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். பூங்கா வை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு நல்ல முறையில் நலச்சங்கங்கள் பராமரிக்க வேண் டும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக அமையும்