தினமலர் 29.09.2010
கோவை தெற்கு மண்டலத்தில் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்
கோவை : கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்துக்குட்பட்ட வார்டுகளில் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் அக்., 1ல் நடக்கிறது.கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை தெற்கு மண்டலத்துக்குட்பட்ட கருப்பகவுண்டர் வீதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வருகிற அக்., 1ம் தேதி காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடக்கிறது. மேயர் வெங்கடாசலம் தலைமை வகிக்கிறார். 42, 43, 44,45,46 மற்றும் 47 உள்ளிட்ட வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ள இம்முகாமில் புதிய சொத்துவரி விகித்தல், புதிய தொழில் வரி விதித்தல், சொத்துவரி பெயர் மாற்றம் செய்தல், புதிய குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்தல்,குடியிருப்பு அல்லாத முறையிலிருந்து குடியிருப்பு முறைக்கு குடிநீர் கட்டணம் மாற்றக் கேட்டல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க கேட்டல், கட்டட அனுமதி வரைபட நகல் வழங்குதல், சொத்து வரி தொடர்பாக மேல் முறையீடு தீர்ப்பாயம் உத்தரவை அமல்படுத்துதல், நில அளவை பதிவேடு நகல் வழங்குதல், எரியாத தெருவிளக்குகளை சரி செய்தல், திடக்கழிவு அகற்றுதல் மற்றும் கழிவுநீர் கால்வாய் சீர்படுத்துதல் உள்ளிட்டவை மீதான கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய இம்முகாமில் போர்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.