தினமலர் 29.09.2010
கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயர் குமார் முருகேஸ் தலைமையில் நேற்று நடந்தது. தி.மு.க., கவுன்சிலர்கள் அன்பழகன், ராமசந்திரன், சண்முகம், அ.தி.மு.க., கவுன்சிலர் செந்தில்குமார், தே.மு.தி.க., கவுன்சிலர் கோவேந்தன், சுயேச்சை கவுன்சிலர் ராதாமணிபாரதி என மொத்தம் ஆறு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கவுன்சிலர் புனிதனை, வார்டு செயலாளர் ஆறுமுகன் என்பவர் தாக்கியதாகவும், கவுன்சிலருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி துணை மேயர் பாபு தலைமையில் தி.மு.க., – காங்கிரஸ், – அ.தி.மு.க., – சுயேச்சை கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். கூட்ட அரங்கில் அரை மணி நேரம் மேயர் குமார் முருகேஸ் அமர்ந்திருந்தார். கோரம் இல்லாததால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறி, அறைக்கு சென்று விட்டார்.
கவுன்சிலர்கள் கூறுகையில், “”கவுன்சிலர்களாகிய நாங்கள் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக பாடுபட்டு வருகிறோம். ஏழாவது வார்டு கவுன்சிலர் புனிதன், தனது வார்டில் தெருவிளக்கு புகார் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம், அவரது மகன் மற்றும் சிலர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். கவுன்சிலர்களாகிய எங்களுக்கு இந்நகரில் எவ்வித பாதுகாப்பும் இல்லை.கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி மாநகராட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து கவுன்சிலர்கள் பாதுகாப்போடு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேயர் குமார்முருகேஸ் கூறுகையில், “”மன்ற கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டால் நான் பொறுப்பேற்க முடியும். வெளியில் நடப்பதற்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியாது. இதற்காக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதும் சரியில்லை,” என்றார். கவுன்சிலரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க., – காங்கிரஸ், – ம.தி.மு.க., கவுன்சிலர்கள் எஸ்.பி., ஜெயசந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர்.