தினமலர் 30.09.2010
புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வுக்காக நட்பு ரிக்ஷா அறிமுகம்
சென்னை : புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முற்றிலும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள் ரிக்ஷா சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. முக்கிய இடங்களில் உலா வரும் இந்த நட்பு ரிக்ஷாவில் இரண்டு கி.மீ., வரை இலவச பயணம் செய்யலாம்.புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முற்றிலும் வித்தியாசமான புதிய டிரை சைக்கிளை, “ஈகோ பிரீ கேப்‘ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் அறிமுக விழா சென்னை மெரீனாவில் நடந்தது.”எக்ஸ்னோரா‘ தலைவர் நிர்மல் தலைமை வகித்தார். சைக்கிள் ரிக்ஷாவை போலீஸ் கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார். எக்ஸ்னோரா நிர்வாகி கிருத்திகா உதயநிதி, பஞ்சாப் மாநில இளைஞர் எக்ஸ்னோரா தலைவர் ஆயிஷாவும் டிரை சைக்கிளில் முதல் பயணம் செய்தனர்.புதிய முயற்சி குறித்து “ஈகோ பிரீ சென்னை‘ நிர்வாக இயக்குனர் சிவராஜ் கூறியதாவது:வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய ரிக்ஷா இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 45 நாட்களில் 50 சைக்கிள் ரிக்ஷாக்கள் சென்னையில் உலா வரும். முக்கிய இடங்களிலிருந்து இரண்டு கி.மீ., வரை இயக்கப்படும். முதியோர், உடல் ஊனமுற்றோர், சிறார்கள், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் இரண்டு கி.மீ., வரை இலவசமாக பயணம் செய்யலாம்.ரிக்ஷா டிரைவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். டிரை சைக்கிளில் தனியார் நிறுவன விளம்பரங்கள் செய்யப்படும். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் செலவுகள் சரி செய்யப்படும். தற்போது சாதாரணமாக மிதித்துச் செல்லும் சைக்கிளாகத்தான் உள்ளது.விரைவில் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் மாற்றப்படும். சைக்கிளின் இயக்கத்திற்கு ஏற்ப பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வசதி செய்யப்படும். ஆறு மாதங்களில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்தியாவில் 800 டிரை சைக்கிள்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு சிவராஜ் கூறினார்.