தினமலர் 08.10.2010
ரங்கராஜபுரம் மேம்பாலம் ஜனவரியில் திறப்பு
சென்னை : “”ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம் ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும்,” என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோடம்பாக்கம் – மாம்பலம் ரயில் நிலையங்களுக்கு இடையில், ரங்கராஜபுரம் பகுதியில் 23 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.தி.நகர் பசுல்லா சாலையில் இருந்து, கோடம்பாக்கம் செல்ல ரங்கராஜபுரத்தில் இறங்கும் வகையிலும், கோடம்பாக்கத்தில் இருந்து தி.நகர் செல்ல பசுல்லா சாலையில் இறங்கும் வகையிலும், “ஒய்‘ வடிவத்தில் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து இப்பணியை மேற்கொள்கிறது.இந்த பணிகளை பார்வையிட்டபின், மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:ரங்கராஜபுரம் மேம்பாலத்தின் கட்டுமானப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். அதற்கு ஏற்றாற் போல், மாநகராட்சி மற்றும் ரயில்வே துறையின் பணிகள் வேகமாக நடக்கிறது. இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டால், ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும்.இந்த நிர்வாகம் பொறுப்பேற்ற பின், ஆறு மேம்பாலங்களும் ஒரு சுரங்கப்பாதையும் திறக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் கட்டுமானப் பணி இரண்டு மாதத்தில் முடிவடையும். இது தவிர 10 க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் சுரங்கப் பாதைகள் கட்டும் பணி நடக்கிறது.வட சென்னையில், கணேச புரம், வியாசர்பாடி சங்க சாலை ஆகிய இடங்களில் மேம்பாலங்களும் வில்லிவாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை அருகில் சுரங்கப் பாதை கட்டும் பணிகளும் நடக்கிறது.இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன் துணை கமிஷனர் (பணிகள்) தரேஷ் அகமத், தலைமைப் பொறியாளர் விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.